![]() |
வயக்குறு மண்டிலம் = மூன்றால் நாள் = திரிதியை திரிதியை என்னும் வடமொழிப் பெயர் பெற்ற அரசன் திருதராட்டிரன் |
உன் இன்பக் கொடை இல்லாவிட்டால் இவள் வாடிப்போவாள்
என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
1
வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை.
இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’.
திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று
என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால்
கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு அவனே தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக் காப்பாற்றினான்.
அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டபோது ஆண்யானை அந்தத் தீயைக் காலால்
மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு அது. இத்தகைய கொடிய காட்டைக்
கடந்து செல்லும் ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க.
2
சிறப்புச் செய்தவர் பக்கத்தில் இருக்கும்போது
அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு அவர் அகன்றவுடன் அவரைப் பழித்துத் தூற்றும் அற்பர் போல,
காதலர் தழுவும்போது மலர் போல இருந்ததுவிட்டு, காதலர் அகன்றதும் இவள் கண்கள் அழுகின்றன.
3
செல்வரோடு சேர்ந்திருந்து உண்டு மகிழ்ந்துவிட்டு,
செல்வர் நிலை தளர்ந்தபோது, எண்ணிப் பார்க்காமல் இருக்கும் உணர்வில்லாதவர் போல, காதலர்
இன்பம் தரும்போது தோளில் இருந்துவிட்டு, அவர் நீங்கியவுடன் தோள்வளையல் கழன்று ஓடுகின்றன.
4
நண்பனின் உள்ளத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைச்
சேர்ந்திருக்கும் நாளில் தெரிந்துவைத்துக்கொண்டு அவனிடமிருந்து பிரிந்த காலத்தில் அவற்றைப்
பிறருக்குச் சொல்லும் பெருமையில்லாவர் நட்பைப் போல் நீ காதலின்பக் கொடை நல்கும்போது
ஒளி திகழ இருந்துவிட்டு, ஒருநாள் காதலர் பிரிந்ததும் இவள் நெற்றி பசப்பு ஊர்ந்து கிட்க்கிறது.
5
என்றெல்லாம் நான் உனக்குக் கூறுவதால் என்ன
பயன்? எல்லாமே உனக்கு நன்றாகத் தெரியும். வானம் பொழியாவிட்டால் வாடும் இந்த உலகம் போல,
நீ அளி செய்யாவிட்டால் இவள் அழகெல்லாம் வாடிப் போகும்.
அரக்கு மாளிகை எரியும்போது வீமன் பாஞ்சாலி உள்ளிட்ட ஐவரையும் காத்தல் |
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 25
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
1
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10
குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்:
தரவு
2
மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர்
தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ
சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி, மற்று அவர் 15
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;
3
ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்குங்கால், நெகிழ்பேகும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு போல்; 20
4
ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்;
மூன்றும் தாழிசை
5
என ஆங்கு, 25
தனிச்சொல்
யாம் நிற் கூறுவது எவன் உண்டு எம்மினும்
நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம்
துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின்
அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே.
சுரிதகம்
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, '
நீ பிரிந்தால்
பீடிலார் தொடர்பு போல,நும்மை
அலர் தூற்றுவன
இவ் வகைப்பட்டன
சில உள' எனத்
தலைவி ஆற்றாமை கூறி,
செலவு அழுங்குவித்தது.
No comments:
Post a Comment