![]() |
இலங்குதேர் \ பொய்த்தேர் \ கானல்நீர் \ மரல் \ Mirage |
கனவும் நினைவும் பற்றிய உரையாடல்.
தலைவி தோழியிடம்
பிரிந்து செல்ல இருக்கிறேன் என்று அவர் என் நெஞ்சு நடுங்குமாறு சொல்லக் கேட்டேன். சினம் கொண்டேன்.
அவர் அஞ்சினார். என்றாலும் அந்தச் சொல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது. (இன் தீம் கிளவியாய்)
தோழி தலைவியிடம்
எனக்குத்
தெரியும். உன் கேள்வன் புதிதாக சில சொல்லி உன்னைப் பாராட்டினான். ஏதோ மனத்தில் வைத்துக்கொண்டுதான்
புதிதாகச் சொல்லிப் பாராட்டுகிறான் என்பதை அப்போதே தெரிந்துகொண்டேன்.
தலைவி தன் கனவைப்பற்றிச் சொல்கிறாள்
தூய்மையான
மெத்தையில் என்னைத் தழுவி உடலுறவு கொண்டவர் நான் தூங்கும்போது என் கனவில் (பாயலில்) வந்தார். வளையல் அணிந்த முன்னங்கைகளால் அவரைப்
பிடித்துக்கொண்டு கைவிட (கையாறு கொள்ள) மறுத்துவிட்டேன்,
தலைவன் சொன்னதாகத் தலைவி சொல்கிறாள்
பேய்த்தேர்
என்னும் கானல்-நீரை, நீர் என்று கருதிக்கொண்டு, இடுக்கமான தந்தம் கொண்ட யானை ஓடும்
நெடுமலைக் காடு அது. அந்தக் காட்டின் நடுவில் நின்று, பொருள் தேடுவேன். அந்தப் பணி
முற்றுப்பெறும் காலம் வரையில்தான் இருப்பேன். ஆயிழாய்! (பெண்ணே)
தலைவி தோழியிடம்
அவர்
நெஞ்சில் இருப்பது அதுவாயின், அவர் இல்லாமல் உயிர் வாழும் வல்லமை இல்லாதவளாக நான் இருப்பேன்
ஆயின், என் மார்பில் தொய்யில் எழுதிவிட்டு அணைக்காமல் செல்கிறாரே என்று, நொய்யப் பேசும்
பழி அவர்மேல் நிற்ப, அவரோடு என் உயிர் போகிறது.
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 24
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
வெண்டளை பிழையாது
வந்த கலிவெண்பா
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்காகும்' என்னும் சொல்
இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, 5
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல்
தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள் கொல்லோ
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10
நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்றெஞ்,
செய் பொருள் முற்றும் அளவு?' என்றார்; ஆயிழாய்!
தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின்,
'தொய்யில் துறந்தார் அவர்' என, தம்வயின், 15
நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்.
தலைமகன் குறிப்புக் கண்டு பிரிவனென ஐயுற்றுச்
செல்கின்ற தலைவி அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டுப் பொருள்வயிற் பிரிகின்றானெனத்
துணிந்து ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது.
“மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே” என்பதனால்
அந்தணன் அறங்கருதித் தூதிற்பிரிந்து அவ்வரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருவதற்குப்
பிரிகின்றதென்று கொள்க, “வேற்றுநாட் டகல்வயின் விழுமம் கூறுகின்றது.
No comments:
Post a Comment