![]() |
பனங்குடை உண்கலம் |
![]() |
பனங்குடை உண்கலம் |
தலைவி தலைவனிடம் மன்றாடுகிறாள்.
1
விளைச்சலை மேய வரும், ஒளிரும் தந்தம் கொண்ட
யானையை கவணையால் கல் எறிந்து ஓட்டுபவர்கள். பின்னர் அதே கவணைக் கல்லால் பூவும் காயுமாக
இருக்கும் மரத்தில் அடித்து வேண்டியதை எடுத்துக்கொள்வர். இப்படிப்பட்ட கொடுமையான காட்டு
வழியில் தனிமையில் நீ செல்லும்போது, நான் இங்கே தனியே இருத்தல், வெறுவாயை மெல்லும்
(அழுங்கல் = எதேதோ பேசுதல்) ஊரார் வாய் நகைப்பதற்கு
இடம் தரும். இனி, நான் உண்ணவும் மாட்டேன், உயிர் வாழவுப் மாட்டேன்.
2
பனைமரத்திலிருந்து இறக்கிய
புதுக் கள் வேள்நீர். வேள்நீரைப்
பனங்குடையில் வாங்கிக் குடித்துவிட்டு குடையை எறிந்துவிட்டுச் செல்வது வழக்கம். தோளை
அணைத்து அதன் நலத்தை உண்டபின் விட்டுவிட்டுச் செல்லும் பெண்ணின் நிலையும் அந்தப் பனங்குடை
போன்றதுதான்.
3
திருவிழாவுக்கு விருந்தாளிகள்
ஊருக்கு வருவர். விழா விருந்து
உண்டு மகிழ்ந்துவிட்டுப் போய்விடுவர். தன் இன்பத்தைத் தந்து, பெண் இன்பத்தைக் குடித்துவிட்டு
ஆண்கள் போய்விடுவார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் நிலை திருவிழா முடிந்து விருந்தாளி
சென்றுவிட்ட ஊர் வெறிச்சோடிக் கிடப்பத்து போன்றதாகி விடும்.
4
பெண்ணோடு கூடி இருந்து அவளது குணங்களை உண்ட
ஆண்மக்கள், சூடிய பூவை வீசி எறிவது போலப் பெண்ணை எறிந்துவிடுவர்.
5
இப்படி நிகழ்வது போல, நானும் உன் நெஞ்சிலிருந்து
தூக்கி எறியப்பட்டிருக்கிறேன். வேட்டை நாய் முடுக்குவதிலிருந்து தப்பி ஓடி, வேடன் வலையில்
மாட்டிக்கொண்ட மான் போல, உன்னுடனேயே என் நெஞ்சு வருகிறது. அந்த நெஞ்சு என்னிடம் வராமல்
பாதுகாத்துக்கொள்வாயாக.
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 23
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
![]() |
கவணை |
![]() |
கவணை |
![]() |
அம்புக் கவணை |
![]() |
கவண் |
1
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல்
நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: 5
இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்
தரவு
2
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;
3
நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;
4
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்;
மூன்றும் தாழிசை
5
என ஆங்கு,
தனிச்சொல்
யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, 15
கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.
சுரிதகம்
பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி எம்மையும்
உடன் கொண்டு சென்மினென்றாட்கு உடன்படாது அவன் பிரியலுறத் தனது இறந்துபாடு தோன்றக் கூறியது.
No comments:
Post a Comment