Pages

Thursday, 16 June 2016

கலித்தொகை Kalittogai 22

இள முலை
தலைவியின் நிலைமையை எண்ணிப்பார்க்கும்படி, பொருள் தேடப் பிரியும் தலைவனிடம் தோழி சொல்கிறாள்.
1
திருப்பித் தரவேண்டிய கடனைப் (உண்கடன்) பெறுவதற்காக ஒருவரைப் பாராட்டிக் கெஞ்சும்போது காணப்படும் முகமும், தாம் கொண்ட கடனைத் திருப்பிக் கொடுக்குங்கால் காணப்படும் முகமும் வெவ்வேறாக இருத்தல் பழங்காலம் தொட்டுக் காணப்படும் ஓர் இயற்கை நிகழ்வுதான். இன்றைக்கும் அது புதிது அன்று. மாந்தர்களே! கேளுங்கள். தாய் தன் உயிரையே கொடுத்துப் பெற்ற மகளைப் பேணுவது போல, நன்மை பயக்கும் மொழிகளைப் பேசுபவர்கள் பக்கம் மக்கள் செல்வதில்லை. என் தோழி தன் இன்ப-நலன் எல்லாவற்றையும் உனக்குக் கொடுத்துவிட்டாள். நீயோ எல்லாவற்றையும் உண்டுவிட்டு பிரிந்து செல்கின்றாய். (இறல்கொடு) இப்போது ஊரார் ஏதேதோ பேசுகின்றனர். நீயோ உன் பொருள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முனைகின்றாய்.
2
மணக்கும் முல்லை வரிசை போல இருக்கிறது என்று அவள் பல்வரிசையைப் பாராட்டினாய். அந்த அழகு பறிபோவதைப் பாராட்டினாயா. (எண்ணிப்பார்த்தாயா)
3
எண்ணெய் வைத்துச் சீவி, மாணிக்கக்கல் ஒளிர்வது போல் மினுமினுக்கும் ‘ஐம்பால்’ கூந்தல் ஒப்பனையைப் பாராட்டினாய். அது செய்வினைக் கலை என்று தெரிந்து பாராட்டினாயா. (எண்ணிப்பார்த்தாயா)
4
குளத்தை அழகு செய்யும் பசுமையான தாமரை மொட்டு போன்ற இவளது இளமையான முலையைப் பாராட்டினாய். அந்த முலை தளர்ந்து போகுமே என்று பாராட்டினாயா (எண்ணிப்பார்த்தாயா)
5
தங்கம் ஒளிர்வது போன்று தளதளக்கும் அவள் மேனி ஒப்பனை (அவ்வரி) வாடும்படி விட்டுவிட்டு வெயில் காயும் காட்டில் நீ செல்லும்போது அவள் படும் வேதனையைக் கூறியது (கூறநின்றது) உண்டா. உலக இன்பங்களைத் துய்க்காமல் இருக்கிறோமே அதனைக் கூறியது உண்டா.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 22
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
1
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்!
தாய் உயிர் பெய்த பாவை போல,            5
நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை;
தரவு
2
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்      10
பறி முறை பாராட்டினையோ? ஐய!
3
நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்
செய்வினை பாராட்டினையோ? ஐய!
4
குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்    15
இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ? ஐய!
மூன்றும் தாழிசை
5
என ஆங்கு,
தனிச்சொல்
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட,
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண்          20
படர் கூற நின்றதும் உண்டோ ? தொடர் கூர,
துவ்வாமை வந்தக்கடை.
சுரிதகம்

பிரிவுணர்த்தப்பட்ட தோழி அதற்கு உடம்படாது தலைமகனை நெருங்கிக் களவுக்காலத் தொழுக்கம் எடுத்துக்காட்டி ஆற்றுவித்து உடம்பட்ட வாய்பாட்டான் மறுத்தது.

No comments:

Post a Comment