![]() |
தோள் இணை |
அன்று பிரியமாட்டேன் என்றாய், இன்று பிரியவேண்டும்
என்கிறாய். இவற்றில் எது உண்மை? தோழி தலைவனைக் கேட்கிறாள்.
1
பால் போன்ற தந்தமும், உரல் போன்ற அடியும்,
ஈரம் பட்டு ஒழுகும் மதநீரும் கொண்ட ஆண்யானை இனம் பிரிந்துவிட்டதால் வழியில் வருபவர்களையெல்லாம்
தாக்கிக்கொண்டு வேறு இடத்துக்குச் செல்லும் வழியில் பொருள் தேடிக் கொண்டுவரச் செல்லவேண்டும்
என்று அருள் இல்லாத சொல்லும் சொல்கிறாய்.
2
இவள் நெற்றியை நன்றாக நீவிக்கொண்டு உன்னைப்
பிரியமாட்டேன், அஞ்சவேண்டாம் என்று நல்ல சொற்களையும் அன்று மொழிந்தாய்.
3
இவற்றில் எவை உண்மையான சொற்கள்? (வாயின – வாய்மையின) பொருளானது தனக்கு உரியவர் இன்னார்
என்று பார்க்காமல், முன்பு செய்த வினைப் பயனால் யாராரிடமோ சென்று சென்று தங்கும். அந்தப்
பொருளுக்காக நீ பிரிந்தால், இவள் கண்ணிமைக்கும் காலம் கூட உயிர் வாழ மாட்டாள். இவளது
மூங்கில் போன்ற தோளுக்கு இணையாகிய உன்னை மறந்து வாழமாட்டாள்.
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 21
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
1
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி,
ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து,
பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும்
அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; 5
2
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,
நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே
3
அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே!
'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள்தான், 10
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே.
தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனை
நெருங்கிக் களவுகாலத் தொழுக்கம் எடுத்துக் காட்டலாற் றெளிவுபட மொழிந்ததூஉம் பொருளது
நிலையின்மையும் அவளது ஆற்றாமையும் கூறி செலவு மறுத்தது.
No comments:
Post a Comment