Pages

Thursday, 16 June 2016

கலித்தொகை Kalittogai 20

ஆண்மான், பெண்மான்
இணைந்து செல்லல் 
பொருள் தேடச் செல்லும்போது உன்னுடன் நானும் வருவேன் என்று தலைவி கூறுகிறாள்.
1
கொடிய பாலைநிலக் காடு. பல வளங்களையும் பகிர்ந்து அளித்துப் பயன்பட்ட நிலம் பசுமை அழியும்படி ஞாயிறு காய்ந்தது தன் சினத்தை அக் காட்டில் கொட்டியது. அதனால் தணியாத கோடை. கொடுமையான கோடை. யானை இந்தக் கோடைப் பிணியால் தாக்கப்பட்டு தளர்ந்து நடக்கிறது. பச்சை நிறம் திகழவேண்டிய (மணி திகழ்) அந்த மலையில் குளங்களில் உள்ள மண் வெடித்துப் புழுதி கிளம்புகிறது.
2
கிளி போன்று பேசுபவளே! மழைத்துளி அறியாத காடு அது. அதில் உன்னால் எளிதாக அடி வைத்து நடக்க முடியுமா – என்று வினவுகின்றீர். ஒருவர் வாழும் நாள் காற்றைப் போல் நிலை இல்லாதது. உன் நெஞ்சு மழை எனக்கு இருக்கிறது. எனக்கு அவலம் என்ன வந்துவிடப் போகிறது?
3
அமிழ்தம் போல ஊறும் நீர் கொண்ட பற்களை உடையவ்வளே! உனக்குத் தாகம் எடுத்தால் பருகுவதற்கு அங்குள்ள ஆற்றில் நீர் இல்லையே என்கின்றீர். ஆற்றிலே நீர் வற்றிவிடுவது போல இளமை கடந்து போய்விடுமல்லவா? உன் நெஞ்சத் தெளிவாகிய நீர் எனக்கு இருக்கிறதே, அது போதும், மருண்டு போய் இங்கு ஒழிந்துகிடக்க மாட்டேன்.
4
மூங்கில் போன்ற அழகிய தோளை உடையவளே! நீ வரின் அங்குள்ள மரங்களில் நிழல் இல்லை, எனகின்றீர். நீ இல்லாவிட்டால் மரத்தின் தளிர் போன்ற என் மேனி நலம் உதிர்ந்துபோகும் அல்லவா? உன் காலடி நிழலில் வாழ்வதைக் கைவிட்டு, நான் தனித்திருப்பதை விரும்புவேனா?
5
என்றொல்லாம் அண்டமுடியாத காட்டின் கொடுமையைப் பற்றிக் கூறுகின்றீர். கானவர் எய்யும் அம்பு தவிர்க்க இயலாததாக இருக்கும் கல்லுப் பாதையில் ஆண்மானைப் பின்தொடர்ந்து பெண்மான் செல்லாமல் இருக்குமா? அந்த நிலைதான் எனக்கும்.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 20
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
1
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற,
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்,
தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும்
மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக,   5
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம்
இது தரவு
2
'கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ,
தளி உறுபு அறியாவே, காடு?' எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து
அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ;       10
3
'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின்,
ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும்
தேறு நீர், உடையேன் யான்; தெருமந்து ஈங்கு ஒழிவலோ;
4
'மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்                15
மாண் நிழல் இல, ஆண்டை மரம்' எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ;
இவை மூன்றும் தாழிசை
5
என ஆங்கு,
இது தனிச்சொல்
'அணை அரும் வெம்மைய காடு' எனக் கூறுவீர்!     20
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை,
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே;
இது சுரிதகம்

பிரிவுணர்த்திய தலைவற்குத் தலைவி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றாட்கு அவன் கானின் கடுமையுந் தலைவி மென்மையுங் கூறுவது கேட்ட தலைவி நாளது சின்மையும் இளமையதருமையுங் கூறி எம்மையும் உடனுகொண்டு சென்மினென்றது .

No comments:

Post a Comment