Pages

Thursday, 16 June 2016

கலித்தொகை Kalittogai 19

முயங்கல்
பிரிந்து சென்றால் இறந்துவிடுவேன் என்று தலைவி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.

ஐய! மென்மையாகத் தழுவிய காலத்தில் செம்மையாகவும், இனிமையாகவும் பேசியவை எல்லாம் பொய்யாகும் என்று எனக்கு எப்படித் தெரியும். ஊரே கொள்ளாத அளவுக்கு நம் உறவைப்பற்றிப் பேசும்படிச் செய்துவிட்டு, பகல் காலத்தையே வெறுக்கச் செய்யும் கொடிய காட்டு வழியில் நீ செல்லவிருப்பதை அறிந்தேன். உன்னை மகன் என்று நான் சொல்லமாட்டேன். இனி. நீ செல். அப்படி நீ சென்று பொருள் தேடும் உன் வினை முற்றுப்பெறட்டும். அது அன்பு-அறம் அன்று. பொருள்-அறம். அங்கு வருவோரிடம் என்னைப்பற்றிக் கேட்காதே. ‘நானே நினைக்கும்படி துறந்து வந்தேனே, அவளது பண்பு-நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா’ என்று வினவாதே. அப்படி வினவினால், உன் செம்மாப்பு பகலில் எரியும் விளக்கைப் போல மங்கிப் போகும். உன் பொருள் தேடும் செயல் முற்றுப்பெறாமல் ஓர் அவலம் தோன்றும். நான் இறந்துபட்டிருப்பேன். – இப்படித் தலைவி கூறுகிறாள்.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 19
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;               5
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின்,            10
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.

பிரிவுணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும் பிரிவின்மேற் சென்ற உள்ளத்தனாயினானை நீ பிரியின் இவள் இறந்துபடுமெனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது.

No comments:

Post a Comment