Pages

Wednesday, 15 June 2016

கலித்தொகை Kalittogai 18

தொய்யில் எழுத்து
தண்ணீர் உண்ணத் தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை. அந்த ஆசை துரத்துகிறது என்பதற்காக ஐயனே! என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்தனவே அதனையும் எண்ணிப்பார். சென்றவர்கள் எல்லாம் தண்ணீர் மொள்வது போல மொண்டுகொண்டு வர பொருள் கொட்டிக் கிடப்பதில்லை. பொருளீட்டாதவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதில்லை. இளமையும் காமமும் இணையப் பெற்றவர் விரும்பும் செல்வம் வேறொன்று உண்டோ? உயிரோடு உள்ள வரையில் ஒரு கையால் துணைவரைத் தழுவிக்கொண்டு, மற்றொரு கையால் கூறுபட்டுக் கிடக்கும் ஆடையை உடுத்திக்கொள்ளும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. இளமை போய்விட்டால் திரும்ப வராது. எனவே இளமையைத் துய்த்துக்கொள். – தோழி தலைவனுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறாள்.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 18
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;     5
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,            10
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

“ஒன்றாத்தமரினும்” என்னும் சூத்திரத்தில் “நாளது சின்மையு மிளமையதருமையுந், தாளாண் பக்கமுந் தகுதியதமைதியு, மின்மைய  திழிவு முடைமைய துயர்ச்சியு, மன்பின தகலமு மகற்சிய தருமையும்” எனக்கூறிய எட்டினையும் தலைவன் கூறக் கேட்ட தோழி, அவற்றை “நிகழ்ந்தது கூறி நிலையலுந்திணையே” என்னும் விதியாற் றலைவற்குக் கூறிச் செலவழுங்குவித்தது.

No comments:

Post a Comment