Pages

Saturday, 1 November 2014

புறநானூறு 67 Purananuru 67

கோப்பெருஞ் சோழன்


புலவர் 
மன்னன் தோழனிடம் 
அன்னச்சேவலைத் தூது விடுகிறர்.

அன்னச் சேவலே!

போரில் வெற்றி கொண்ட அரசன் 
தன் நாட்டைக் காப்பது போல 
உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் 
நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். 

நீ குமரித்துறை அயிரை மீனை அருந்திய பின்னர் 
வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய் ஆயின் 
இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக. 

அங்கே அரண்மனைக்குள் சென்று, 
அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி 
“இரும்(பெருமை மிக்க) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” 
என்று சொல்வாயாயின் 
உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை 
அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)

பாடல்

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
மையல் மாலை, யாம் கையறுபு இனைய,    5
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது
சோழ நல் நாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்       10
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர்
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.

திணை பாடாண் திணை
துறை இயன்மொழி.
கோப்பெருஞ் சோழனைப் 
பிசிராந்தையார் 
பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

இது இக்காலத்து அன்னம்
நெடுந்தொலைவு பறக்க இயலாத பறவை
சங்ககாலத்து அன்னம் இதன் இனம்
நெடுந்தொலைவு பறக்க வல்லது



No comments:

Post a Comment