சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி - போர்ப்புறம் (பேட்டைவாய்த்தலை) - போர்
எத்தனை
யானைகள்!
அத்தனை யானைகள்மேலும் பாய்ந்திருக்கும் அம்புகள்.
அதனால் அவை போரிடாமல் கிடந்தன.
குதிரைகளும் வீரர்களோடு மாண்டன.
தேரில் வந்த மறவர்களும்
அவர்கள் அணிந்திருந்த தோல்
என்னும் மார்புக் கவசம்
மூடிய நிலையில் மாண்டு கிடந்தனர்.
முரசுகள் முழக்குவார் அற்றுக்
கிடந்தன.
வேந்தர்களும் சந்தனமணிந்த மார்போடு
களத்தில் மாண்டு கிடந்தனர்.
இனி அவர்களின்
நாட்டு வளம் என்ன ஆவது?
நன்செய்க்
கழனிகளில் பூத்த
ஆம்பல் மலர்களைச் சூடிக்கொண்டு
பச்சிலைகள் படர்ந்திருக்கும் குளத்து
நீரில்
குளித்து விளையாடும் மகளிர் மகிழ்வு என்ன ஆவது?
பாடல்
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே;
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், 5
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, 10
என் ஆவதுகொல்தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? 15
திணை தும்பை;
துறை தொகை நிலை.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும்,
சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும்,
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைப்
பரணர் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
முதல்
கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு
![]() |
| போரின் முடிவில் இருதிறப் படைகளும் மடிந்தன எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்சேரலாதனும் பெருவிறற் கிள்ளியும் வீழ்ந்தனர் |

No comments:
Post a Comment