Pages

Wednesday, 29 October 2014

புறநானூறு 62 Purananuru 62

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி - கருவூர் அரசனுக்கும், உறையூர் அரசனுக்கும் போர் 


போர்ப்புறம் (திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை) 
என்னுமிடத்தில் போர். 

படைவீரர்கள் மாண்ட பின்னர் 
அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர். 
இதற்கு அறப்போர் என்று பெயர். 
இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர்.

இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் 
போர்களத்தில் சாய்ந்து கிடந்தன. 
பேய்மகளிர் குருதியை வாரித் தலையில் பூசிக்கொண்டனர். 

புண் பட்டுச் சாவோரைத் தூங்க வைப்பதற்காக 
அனந்தல் பறை (சாவு மேளம்) கொட்டப்பட்டது. 

போர் மறவர்களின் உடல்களைப் 
பருந்துகள் தின்றுகொண்டிருந்தன.

இறந்தவர்களின் மனைவிமாரும் 
பச்சைக் கீரைகளைத் தின்றுகொண்டும், 
பனிநீரில் குளித்துக்கொண்டும் 
கைம்மைக் கோலம் கொள்ளாமல் 
கணவருடன் சேர்ந்து மாண்டுவிட்டனர்.

புகழ் பெற்றவர் அடையும் வானுலகத்துக்கு 
நல்ல விருந்து கிடைத்தது.

மாண்டவர் நாடு என்ன ஆவது?
மாண்டவர் புகழ் மலரட்டும் எனப் புலவர் வாழ்த்துகிறார்.

பாடல்

வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க,               5
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே;
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே;
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம்   10
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை,
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர,
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே;         15
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே!
           
திணை தும்பை
துறை தொகை நிலை.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும்
சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும்
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் 
கழாத்தலையார் பாடியது.


காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

இது அரங்கில் நடக்கும் காட்சிப்போர்
போர்க்களத்தில் இரண்டு அரசர்கள் 
இதுபோல் தனித்துப் போரிட்டுக்கொண்டனர்
இதற்கு அறத்தின் மண்டல் என்று பெயர்


போர்களத்தில் மறவர்கள் போரிடுதல்



No comments:

Post a Comment