Pages

Tuesday, 7 October 2014

புறநானூறு 29 Purananuru 29

சோழன் நலங்கிள்ளி


உறையூர்ப் புலவர் முதுகண்ணன் சாத்தனார் 
சோழன் நலங்கிள்ளிக்குக் கூறும் அறிவுரை இது.

உன் நாளவை 

நீ அளித்த பொன்னாலான தாமரையை 
விரிந்த மயிர் கொண்ட தலையில் சூடிக்கொண்டுள்ளப் 
பாணர் முற்றுகையில் திளைக்கட்டும்.

அதன் பின் உன் சந்தனம் பூசிய மார்பு 
மகளிரின் தோள் முற்றுகையில் திளைக்கட்டும்.
இப்படி உன் சுற்றம் முரசு முழக்கத்துடன் விளங்கட்டும்.

எப்போதும் கொடியவர்களை அழிப்பதும் 
நல்லவர்களுக்கு உதவுவதுமாக இருப்பாயாக.
நல்லது செய்தால் நன்மையும் 
தீயது செய்தால் தீமையும் விளையாது 
என்பவர் பக்கம் நீ சேராதே.

உன் படையினர் 
நெல்வயலில் பறவைகளை ஓட்டிக்கொண்டும்
தானே விழுந்த பனைமட்டையை எரித்து 
மீனைச் சுட்டுத் தின்றுகொண்டும்
கள் பருகிக்கொண்டும்
கள்ளை விரும்பாதபோது 
இளநீரைக் குடித்துக்கொண்டும் மகிழ்ந்திருக்கட்டும்.
பெற்றது போதும் என்று சிலர் 
கூவைக்கொடி படர்ந்த 
சிறிய நாலு கால் பந்தல் மனையில் வாழ்கின்றனர்
அவர்களின் வாழ்வு செழிக்க நீ உதவ வேண்டும்.

வந்தவர்களுக்கெல்லாம் உதவும் பண்புடையதாக 
உன் வாழ்நாள் செய்கை அமையட்டும்.
விழாவில் இசை முழக்குவோர் வந்து போவது போல 
வாழ்க்கை நிலை இல்லாதது.

நகைத்து மகிழும் பக்கம் உன் சுற்றம் சேரட்டும்
(பகைத்து மகிழும் பக்கம் சேரவேண்டாம்.) 
உன் செல்வம் புகழின் பக்கம் இருக்கட்டும்.

பாடல்

அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து,
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி,
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்,
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி,
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்!
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து,
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்!
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே!
  • திணை பொதுவியல்
  • துறை முதுமொழிக்காஞ்சி.
  • சோழன் நலங்கிள்ளியை 
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

சங்ககால அரசர்கள்
கலைவாணர் பாணர்களுக்கு வழங்கிய
பொன்-தாமரை அணியின்
இக்கால மாதிரி



No comments:

Post a Comment