திறை
- பெய்யப்போகும் மழையின் அளவை விண்மீன்கள் காட்டின.
- காட்டியவாறு மழை பொழிந்தது.
- மக்கள் குறைவின்றிக் கற்றுத் திளைத்து இன்பமுடன் வாழ்ந்தனர்.
- வேந்தர்கள் போரிட்டனர். தோற்றவர் இந்தச் சேர அரசனுக்குக் களிறு, பயன்படு பொருள்கள் முதலானவற்றைத் திறையாகத் தந்தனர். சேரன் சொல்கிறபடி நடந்துகொண்டனர்.
மாந்தரன் மருகன்
- இந்தச் சேரன் மாந்தரன் என்னும் சேரனின் மருமகன்.
- வாள் வலிமை மிக்கவன்.
- மாந்தரன் நடுநிலை தவறாமல் செம்மையாக அரசாண்டவன்.
- இவன் புகழ் வானுலகிலும் பரவியிருந்தது.
- அறத்தெய்வமே இவனை வாழ்த்துகிறது.
இவன் பண்புகள்
- இளஞ்சேரல் இரும்பொறை நெஞ்சிலுள்ள ஈரம் நீர் போன்றது.
- வானம் போன்று அளக்க முடியாத, உயர்ந்த பண்பினைக் கொண்டவன் அவன்.
- கொடுத்துக் குறையாமையால் கடல் போன்றவன்.
- விண்மீன்களுக்கு இடையில் தோன்றும் நிலா போல வேந்தர்களிடையே புகழ் மிக்கவன்.
உரவோர் உம்பல்
- அயிரை தெய்வத்தை வழிபட்டும். கடலில் வேல் பாய்ச்சியும், மாறுபட்டவர்களின் கொட்டத்தை அடக்கியும், கோட்டைகளைக் கைப்பற்றியும், வெற்றித் தெய்வத்தைத் மனதாக்கிக் கொண்டவர்களிடையை யானை போன்றவன்.
வெற்றிகள்
- கட்டுச்சோறு தரும் கொங்கு மக்களின் கோமகன்
- மட்டுக் கள் உண்ணும் குட்டுவர்களின் சிங்கம்
- மதில் கதவின் விட்டத் தாழ்ப்பாள் எழுமரம் போன்ற தோள் கொண்ட பூழியர்களுக்குக் கேடயம்
- கடலோர மரந்தை துறைமுகத்தை தன் நாட்டோடு இணைத்துக்கொண்டவன்
- பல மொழிகள் பேசும் ‘கட்டூர்’-ஐ வெண்ணிற வேளைப்பூவும், சுரைக்கொடியும் படரும்படி பாழாக்கியவன்
காஞ்சி சான்ற வயவர் (தாக்கும் பகைவரை வெல்லும் வீரர்)
- கடல் போன்ற படை
- வில் எய்யும் வல்லமை
- வானில் பூக்கும் மீன்கள் போல் வண்டிகள்
- கவரிமான் போலப் பாயும் குதிரைப்படை
- போன்றவற்றைக் கொண்டவர் அவன் போர்வீரர்.
- இவர்களால் புகழ் பெற்றவன் இந்தச் சேரன்.
காவிரிப் படப்பை நன்னாடு
- நெல் அறுக்கும்போது கழனியில் உழவர் தண்ணுமை இசைப்பர். அந்த இசைக்கு ஏற்றாற்போல மயில் மரச்சோலையில் ஆடும்.
- ஆற்றில் புனலாடுவோர் முழக்கத்துக்கு ஏற்றாற்போல போர்-மள்ளர் ஓய்வு நேரங்களில் கிணை முழக்குவர்.
- உழவர் வீடுகளில் காளை கணைக்கும்.
- இப்படிப்பட்டது காவிரி ஆறு பாயும் நாடு.
சேரன் மனைவி
- இசை இன்பத்தில் திளைக்கும் காவிரி நாடு போல், சூல் உற்று, கற்பு நடத்தையில் ஆறி இருக்கும் மனைவியின் கணவ!
வாழ்த்து
- போர்முரசு இடி போல் முழங்குவது போல, நல்லிசை முழங்க, யானையில் வரும் சேரனே!
- உன் வாழ்நாள் மாதக் கணக்கிலும், மாதங்கள் ஆண்டுக் கணக்கிலும், ஆண்டுகள் ஊழிக் கணக்கிலும், ஊழிகள் வெள்ளக் கணக்கிலும் பெருகட்டும்.
- இப்படி வாழ்த்தி, உன்னை காண நான் வந்துள்ளேன்.
0
Tribute
- The stars foretold the volume of the impending rain.
- The rain fell exactly as predicted.
- The people lived happily, immersed in learning and free from want.
- Kings waged war; the vanquished paid tribute to this Chera king in the form of war elephants, useful commodities, and other goods. They conducted themselves according to the Chera king's will.
Mantharan's Nephew
- He is the nephew of the Chera king named Mantharan.
- He possesses great prowess with the sword.
- Mantharan was a ruler who governed righteously and impartially.
- His fame spread even to the celestial world.
- The very deity of righteousness blesses him.
His Qualities
- The compassion in the heart of Ilamcheral Irumporai is as pure and abundant as water.
- He possesses noble qualities as vast and immeasurable as the sky.
- Like the ocean, his resources remain undiminished despite his boundless generosity.
- He shines with renown among kings, much like the moon amidst the stars.
An Elephant Among the Valiant
- He is like an elephant among those who have won the favor of the Goddess of Victory—achieved by worshipping the deity Ayirai, casting his spear into the sea, subduing the arrogance of adversaries, and capturing fortresses.
Victories
- The noble chieftain of the Kongu people, who provides travel provisions (*kattuchoru*) for the journey;
- The lion among the Kuttuvars, who consume mild toddy;
- A shield to the Puzhiyar warriors—men with shoulders as sturdy as the massive timber bars securing fortress gates;
- He who annexed the coastal port of Maranthai into his own realm;
- He who devastated the multilingual settlement of ‘Kattur’, leaving it overgrown with white *Velai* flowers and bottle-gourd creepers.
Warriors of great renown
- An army vast as the ocean;
- Mastery in archery;
- Wagons resembling stars blooming in the sky;
- Cavalry charging with the swiftness of the *Kavari* deer;
- Such were the forces he commanded—warriors who brought him great fame.
The Fertile Land Nourished by the Kaveri
- In the fields, farmers play the *thannumai* drum while harvesting paddy; peacocks dance in the groves, keeping rhythm with the music.
- Warriors beat the *kinai* drum during their leisure, echoing the sounds of those frolicking in the river.
- Bulls bellow in the farmers' homes.
- Such is the land through which the Kaveri flows.
The Cheran's Wife
- O husband of the wife who—like the Kaveri land immersed in musical bliss—is heavy with child and embodies the serene grace of chastity!
Blessing
- O Cheran, who rides an elephant amidst the resounding of auspicious music—music that echoes like the thunder of war drums!
- May your lifespan multiply: months into years, years into aeons, and aeons into the measureless span of great floods.
- With this blessing, I have come to see you.
0
ஒன்பதாம் பத்து பாட்டு - 90 இதன் முந்தைய பதிவு
மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா 5
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலம்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகல்ஆற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர 10
வாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)
அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
விறல்மாந்தரன் விறல்மருக
ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை 15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடல்இகுப்ப வேல்இட்டும் 20
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே 30
உரவுக்கடல் அன்ன தாங்(கு)அரும் தானையொடு
மாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழ்எஃகம் பிடித்(து)எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்குபெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்
கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச் 45
செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நல்நா(டு) அன்ன
வளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ 50
நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு) 55
உரும்என முழங்கும் முரசின்
பெருநல் யானை இறைகிழ வோயே. (90)
- பெயர்: வலிகெழு தடக்கை
- துறை: காட்சிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment