Pages

Saturday, 6 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 63

3. முருக முனிவர் வனம் - 3



பாஞ்சாலி அபயக் குரல் எழுப்பினாள் 

ஐவர் பஞ்ச பாண்டவரே அபயம் அபயம் 
ஆகாய வாணியம்மா அல்லவரும் பார்த்திடுங்கள் 

ஐயன் பிடாரியரே
அந்தர தேவதையே

சூரிய சந்திரரே
மிருகங்களே
பறவைகளே

பாருங்கள் 

என்னைச் சிறை பிடித்துக்கொண்டு செல்கிறான் 
பஞ்சவருக்குச் சொல்லுங்கள்  

நாய்க்குத் தெரியுமா முழுத் தேங்காயின் அருமை 

ஐயோ சிவனே
மாயவரே சுவாமி 

என்று அபயக் குரல் எழுப்பினாள் 

பாண்டவர் சிவபூசை முடித்துவிட்டுப் பர்னசாலைக்கு வந்தனர்

மனைவியைக் காணவில்லை 

தருமர் தம்பியர் நால்வரை அழைத்தார் 
பாஞ்சாலி எங்கே என்று பார்த்து வா என்றார் 
நால்வரும் நான்கு திசைகளில் சென்று தேடினர்

பாஞ்சாலி வீமனைக் கண்டாள்

ஆயாசம் தீர்ந்தாள் 
அழுத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்

வீமன் துரோபதைக்குக் கை கொடுத்தான். 
அவளைத் தேரிலிருந்து இறக்கி விட்டான். 

வீமனைக் கண்டதும் சயந்தன் திடுக்கிட்டான் 
அச்சத்தில் மயங்கிக் கீழே விழுந்தான். 

வீமன் அவன் தேரை ஒருகையால் தூக்கி அடித்தான் 
தேர் தவிடு பொடி ஆயிற்று. 

ஏதடி பெண்கொடியே 
நீ இங்கு வந்த வயணம் என்ன - என்று துரோபதியை வினவினான்
அவள் நிகழ்ந்ததை விளக்கமாகக் கூறினாள் 

வீமன் புரிந்துகொண்டான்

காட்டுக் கொடி ஒன்றைப் பிடுங்கிக்கொண்டு வந்தான்
அதனால் சயிந்தன் கால்களில் கட்டி அதன் மற்றொரு நுனியைத் தன் இடுப்பில் கட்டி இழுத்துக்கொண்டு நடந்து பர்னசாலைக்கு அருகில் வந்து அவிழ்த்து விட்டான். 

தருமர் கண்டார்

வாருங்கள் மைத்துனரே - என்று சொல்லி வரவேற்றார் 

சயிந்தன் சொல்கிறான்

காட்டில் தங்களைப் பார்க்க வந்தேன் 
நீங்கள் இல்லை
தங்கையைக் கண்டேன்

காட்டுக்கு வந்த வயணத்தைத் தங்கை சொன்னாள் 
துரியோதனன் கொடுமைகளைச் சொன்னாள் 

மனம் வருந்தினேன்
திரும்பிச் சென்றேன் 

மறதியில் என் வாளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டேன் 
தங்கை அந்த வாளை என்னிடம் கொடுக்க வந்தாள் 

அப்போது வீமன் கண்டான் 
என்னைக் கதையால் அடித்து இழுத்துக்கொண்டு வந்தான் 
- என்றான் சயிந்தன்

சாயாம்பூ மன்னவர் தருமர் கேட்டார் 

மனம் உருகினார் 
வீமனை அழைத்து, சயிந்தனுக்குப்  பழங்கள் பறித்துவருமாறு கூறினார். 

அதனைக் கேட்ட தம்பியர் தருமரிடம் நிகழ்ந்த உண்மையை விளக்கினர். 
பாஞ்சாலியைக் கொண்டுபோக வந்தவன் எனத் தெளிவுபடுத்தினர். 

தருமர் வெளுத்ததொல்லாம் பால் எனப் பார்ப்பவர்
அதனால் தருமர் கூறினார் 

ஆங்காரம் கெர்வம் ஆருக்கும் ஆகாது 
ஆணவம் வந்தால் அழிவு வரும் 
பொறுத்தவர் பூமி ஆள்வர் 
பொங்கினவர் காடு உறைவர் 
மனக் குறை வையாதே வந்தவரின் பசி ஆற்று
என்றார் 

அண்ணன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட தம்பியர் 

கனிகள் பறித்துவந்து தந்தனர்
சயிந்தன் அச்சத்தோடு வாங்கிப் புசித்தான் 

போய் வருகிறேன் - என்று வணங்கினான்

வழியனுப்பிவிட்டு வருமாறு தருமர் வீமனை அனுப்பினார்

  • அழைத்துச் சென்ற வீமன் ஐந்து குடுமிகளை மட்டும் விட்டுவிட்டுச் சயிந்தன் தலையை மொட்டை அடித்தான் 
  • மீசையையும் தாடியையும் சிறைத்தான் 
  • அவன் உடம்பெல்லாம் கரும்புள்ளி செம்புள்ளி பொட்டு வைத்தான் 

இப்படி இவன் செய்துகொண்டிருக்கும்போது வீமன் திரும்பவில்லையே என்று தருமர் வீமனைத் தேடி அழைத்து வருமாறு அருச்சுனனை அனுப்பினார். 

  • அருச்சுனன் வந்தான் 
  • அண்ணன் செய்தது கண்டான் 
  • இவனை அனுப்ப வாகனம் வேண்டுமே என்று எண்ணினான். 
  • காட்டுக் கழுதை ஒன்றை ஓட்டிவந்தான் 
  • அதன்மேல் உட்கார வைத்தான். 

இப்படியாக இருவரும் செய்துகொண்டிருந்தனர்
இருவரும் திரும்பவில்லையே என்று தருமர் அவர்களை அழைத்துக்கொண்டு வருமாறு நகுலனை அனுப்பினார். 

  • நகுலன் வந்தான்
  • அண்ணன்மார் செயல்களைக் கண்டான் 
  • தன் பங்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினான் 
  • சாணி உருண்டையை அவன் தலையில் வைத்துத் தட்டினான் 
  • இப்படி மூவரும் செய்துகொண்டிருந்தனர். 

மூவரும் திரும்பக் காலம் தாழ்ந்தது
தேடி அழைத்துவருமாறு தருமர் சகாதேவனை அனுப்பினார். 

அப்போது பாஞ்சாலி "நானும் சென்றுவருகிறேன்" என்றாள்
தருமர் ஒப்பினார்

இருவரும் வந்தனர் 
கண்டனர் 
  • நகுலன் தன் பங்காக ஏதாவது செய்ய எண்ணினான்
  • கழுதைமேல் இருந்தவனை இறக்கி அவன் முகம் கழுதையின் வாலைக் பார்க்கும்படி கழுதையில் உட்காரவைத்துக் கட்டினான். 

இவற்றையெல்லாம் பார்த்த பாஞ்சாலி தன் பங்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினாள். 

  • தன் கற்பின்மீது ஆணையிட்டுச் சாபம் கொடுத்தாள்
  • கழுதை சயிந்தனை இறங்க விடக் கூடாது
  • கழுதையின் நாற்புறமும் அவனது படைகள் செல்லவேண்டும். 
  • இவனைக் கட்டவிழ்க்க வந்தவர்கள் அவிழ்க்க முடியாமல் கழுதையோடு ஒட்டிக்கொண்டு ஓடவேண்டும் 
  • துரியோதனன் காணும் வரையில் இது நிகழவண்டும்
  • என்று சாபம் கொடுத்தாள் 

கழுதையைத் துரத்திவிட்டனர். 

கழுதை சயிந்தனைச் சுமந்துகொண்டு  ஓடிவருகுகிறது
கழுதையைத் தொட்டவர்கள் அதன் பின்னே ஓடிவருகின்றனர். 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

சயிந்தனைப் பாண்டவர்கள் அவமானம் செய்தது



No comments:

Post a Comment