11
ஊர்க்குருவி வனம்
(2)
ஊர்க்குருவி வனம் பற்றிய செய்திகளைப் பிராமணன் அருச்சுனனுக்குக் கூறுகிறான்.
இந்த வனத்தில் ஆண், பெண் ஊர்க்குருவிகள் இரண்டு வாழ்ந்துவந்தன. அவை முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். குஞ்சுக்கு இரை தேடச் செல்லும். இரை கொண்டுவரும். அதற்குள் அந்தக் குஞ்சுகளை எடுத்துச் சென்றுவிடுவார்கள். குஞ்சுகளைக் காணாமல் அவை புலம்பும். இது வழக்கமாக நடந்துவந்தது.
குருவிக்கள் இரண்டும் கூடிப் பேசிக்கொண்டன. இந்த வனத்தில் வழிக்போக்கர்கள் இப்படிக் குஞ்சுகளை எடுத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது.
- ஆதலால் சமுத்திரக் கரைக்குச் சென்றுவிடுவாம் என்றது ஆண்குருவி
- சமுத்திரம் அடித்துக்கொண்டு போய்விடுமே - என்றது பெண்குருவி
- விடுவேனா! சமுத்திர ராசனிடம் சண்டையிட்டு மீட்பேன் - என்றது ஆண்குருவி
சமுத்திர ராசன் இதனைக் கேட்டான். ஆண் குருவியின் வலிமையைப் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
சிட்டுக்குருவிகள் கடற்கரைப் பகுதிக்கு வந்தன. வழக்கம் போல் செத்தைகளைப் பொறுக்கிக்கொண்டு வந்து கூடு கட்டின. கூட்டில் இணைந்தன. பெண்குருவி முட்டையிட்டது. குஞ்சுகள் வெளிவந்தன. குஞ்சுகளுக்கு இரை தேடச் சென்றன.
கடல் அலை பெருகி வந்தது. குஞ்சுகளை அடித்துச் சென்றது. பெண் குருவி புலம்பிற்று. அய்யோ தெய்வமே என்றது.
புலம்பாதே. கடலரசனிடம் போரிட்டுக் குழந்தையை வாங்கித் தருகிறேன் என்றது ஆண்குருவி.
பனையோலை ஒன்றைக் கிழித்துக்கொண்டு வந்து அதில் எழுதியது.
காக்காய், குருவி, கழுகு, பருந்து, மாடப்புறா, மயில், குயில், காடை, கௌராரி, அன்னம், மயில் முதலான எல்லாப் பறவைகளும் இந்த ஒலையைக் கண்டவுடன் ஓடிவாருங்கள். நாம் கடலரசனுடன் போர் தொடுக்க வேண்டும் - என்று அலகால் எழுதியது.
வாயசம் (கழுகு) ஒன்றிடம் கொடுத்து எல்லாப் பறவைகளுக்கும் செய்தி அனுப்பிற்று.
ஆயர் வாகனம் கருடாழ்வார் கடித்ததைப் பார்த்தார். என் பறவையினத்துக்கும் சமுத்திர ராசனுக்கும் சண்டையாம். நானும் செல்லவேண்டும். விடை தாருங்கள் என்று மாயனிடம் கேட்டார். மாயன் சிரித்தார். போய் வா என்றார்.
பிரமன் வாகனம் அன்னம், கந்தன் வாகனம் மயில், மன்மதன் வாகனம் கிளி,
சனிபகவான் வாகனம் காக்கை முதலானவை அனைத்தும் தம் தேவனிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தன.
இது புதுமையாய் இருக்கிறது என்று எல்லாரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
குருவி தன் குறையைச் சொல்லி, சமுத்திர ராசனிடம் போரிட்டு, என் குஞ்சுகளை வாங்கித் தாருங்கள் என்று வேண்டிற்று.
எல்லாப் பறவைகளும் ஒப்புக்கொண்டன. காக்கை, கழுகு, அன்னம், பருந்து, கிளி, மயில், குயில், புறா என்று பல்வேறு பறவைகளும் அணி அணியாகத் திரண்டன.
பறந்தன. கடல் நீரைத் தன் இறக்கைகளில் அள்ளிச் சென்று நிலத்தில் கொட்டின. கடல் வறண்டது. குருவிக்குஞ்சுகள் மீட்கப்பட்டன.
அதனால் இந்த வனத்துக்கு ஊர்க்குருவி வனம் என்னும் பெயர் உண்டாயிற்று - என்று அந்தப் பிராமணன் அருச்சுனனுக்குக் கூறினான்.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
![]() |
| ஆண் பெண் ஊருக்குருவிகள் |

No comments:
Post a Comment