Pages

Tuesday, 9 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 110


4
காளமகாரிஷிவனம்
4

தம்பியர் நால்வரையும் தேடிக்கொண்டு தருமர் துரோபதையுடன் வந்தார். 

தேடிஅலைகையில் தாகம் எடுத்தது 

வழியில் மாயன் மயில் ஆடிற்று
எமன் குயில் கூவிற்று 

மயிலும் குயிலும் குளிர்ந்த இடத்தில் வாழும் என்பர் 
அங்கே தண்ணீர் இருக்கும் 
போகலாம் என்று இருவரும் சென்றனர். 

அங்கே தம்பியர் உறங்குவதைக் கண்டனர் 
தண்ணீர் குடித்த பின் எழுப்பிக்கொண்டு செல்லலாம் என்று எண்ணினர்
குளத்தில் இறங்கினர் 

மாயனின் வான்குரல் 

ஆரடா தம்பி என் குளத்தில் இறங்கியவன்

தாகம். தண்ணீர் குடிக்க ஒப்புதல் தாருமையா
ஒப்புதல் தந்தால் தண்ணீர் குடிக்கிறேன்  

நான் கேட்பதற்குச் சரியான விடை சொன்னால் தண்ணீர் குடிக்க ஒப்புதல் தருகிறேன். 

உலகில் எது அதிசயம்
  • மனிதன் பிறப்பதும் இறப்பதும் 

வருத்தமான பாரம் எது
  • தாய் பிள்ளையை வயிற்றில் சுமப்பது

வாடாப் பயிர் எது 
  • அறுகம்புல் 

எல்லாம் சரி 
தண்ணீர் குடித்துக்கொள் 

இருவரும் தண்ணீர் குடித்தனர்
தருமர் தம்பியரிடம் வந்தார் 

சகாதேவன் தலைமாட்டில் எழுதி வைத்திருந்தான்

"விஷ நீரை அருந்தி மாண்டுவிட்டோம்
நீங்கள் வந்தால் இந்த நீரைக் குடிக்காரீர்
தப்பிப் பிழையுங்கள்"

தருமர் புலம்பல் 

மலையே பருவதமே மாண்டு மடிந்தீரோ
செம்மலையே பருவதமே செத்து மடிந்தீரோ
நீல மலையே நிலத்தோடு சாய்ந்தீரோ

கல்லான தூணுக்குக் கலக்கம் இல்லை என்று இருந்தேன் 
கல்லான தூணைக் கறையான் அரித்ததுவோ 

இரும்பான தூணுக்கு என்ன குறை என்றிருந்தேன் 
அரும்பான தூணுமே இற்று விழுந்ததுவோ

வச்சிரத் தூணுக்கு மயக்கம் இல்லை என்றிருந்தேன் 
வச்சிரத் தூணலவோ மண்ணோடு உளுத்ததுவே 

செம்பருந்து வந்து என்னைச் சிறகால் அடித்ததுவே
குஞ்சைப் பறி கொடுத்த கோழி போல் ஆனேனே

கை ஒடிந்த யானை போல் கலங்கினேன் தம்பியரே 

ஓடுகிற தானுக்கு ஒருகால் ஒடிந்தாற் போல் 
உள்ளம் குலைந்து உருகுகிறேன் தம்பியரே

என்னைத் தவிக்க விட்டு எங்கே மறைந்தீர்கள் 
ஐயையோ தெய்வமே அலையவிட்டுப் பார்ப்பது  ஏன்

வீமனைப் பார்த்துப் புலம்புவது

வெற்றி மதயானை வீமா மதகரியே
கட்டிக் கரும்பே என் கண்மணியே எங்கு ஒளிந்தாய் 

நூலார் கடுந்திரளார் நூற்று ஒரு மன்னரையும் 
கொல்லுகிறேன் என்று நீ கொடிய சபதம் இட்டாய் 

அவ்வார்த்தை தான் மறந்து அப்பா நீ எங்கு ஒளிந்தாய் 

வச்சிர மிடியே நீ மண்ணோடு சாய்ந்தாயோ 
தங்க முடியே நீ தரையில் கவிழ்ந்தாயோ

என்னை அலைய விட்டு எங்கே நீ போய் ஒளிந்தாய் 

(என்று புலம்பி மூர்ச்சையானார்) 
(துரோபதை காட்டுத் தழையால் விசிறினாள்)
(மூர்ச்சை தெளிந்து எழுந்து)

அருச்சுனனைப் பார்த்துப் புலம்புகிறார்

ஆணாள் அழகு மன்னா அருச்சுனா என்பிறப்பே 
என்னைத் தனியே விட்டு எங்கே நீ போய் ஒளிந்தாய் 

மீசை முறுக்கழகா விழியிற் கருப்பழகா
நாவிலே நக்ஷத்திரம் நயன விழிப் பார்வை

பல்லிலே பரச வீணை பாதத்தில் தாமரைப்பூ 
முதுகிலே மச்சம் முழங்காலில் முத்துமணி 

இடது கால் விருது பொம்மை
வலதுகால் வீர தண்டை

தலவிருது 
குலவிருது
சத்திராதி பேர்விருது
எதிர்த்தவன்-தன் விருது 
எதிராளி முகவிருது 

இத்தனை விருதுகளை 
எடுத்து நீ பூட்டிக்கொண்டு 

கட்டி எதிர்த்தாலே 
கலங்குமே சேனை எல்லாம் 
 
அழகை எழுதியவர் 
ஆயுளை எழுதலையே

பெற்றாள் வயிற்றில்
பெருநெருப்பை இட்டாயே 

நகுலனைப் பார்த்து 

அப்பா நகுலா என் அறிவுள்ள கண்மணியே
மலையே பர்வதமே வாழ்வுமலைக் குஞ்சரமே 

மாண்டு மடிவாய் என்று 
மனத்தில் நினைத்ததில்லை

செத்துவிடுவீர் என்று 
சற்றும் அறியேனே 

ஆரைச் சதம் என்பேன் 
அன்னியரைச் தஞ்சம் என்பேன் 

எவரைச் சதம் என்றேன் 
இனி யாரைத் தஞ்சம் என்பேன் 

பார்த்த முகங்களெல்லாம் 
வேற்றுமுகம் காணுதையா

கண்ட முங்ஙகள் எல்லாம் 
கடுத்த முகம் ஆகுதப்பா 

கூடப் பிறந்தீரே
கூட்டுப்பால் உண்டீரே 

ஒக்கப் பிறந்தீரே
ஒரு முலைப்பால் உண்டீரே 

காட்டுக்குள் கையை விட்டுக் 
கயிலாயம் போனீரோ 

தங்கத் தரிக்கவில்லை 
தரையில் கால் பாவவில்லை

நிற்கத் தரிக்கவில்லை 
நிலத்தில் கால் பாவவில்லை 

கூட மடிவேன் காண்
கொற்றவரே உங்களுடன் 

சகாதேவனைப் பார்த்து

சாத்திரக் கொடி வேந்தா 
சகாதேவ ராசாவே 

முன்வரும் காரியத்தை 
முதலிலே சொல்வாயே

இனி நடக்கும் காரியத்தை 
எந்தனுக்குச் சொல்வாயே 

அப்படிக்கொத்ததொரு 
அறிவுள்ள கண்மணியே 

தோறா வடிவழகி
துரோபதை 
தன் கணவர்களைப் பார்த்துப் 
புலம்பல் 

மாலையிட்ட மன்னவர்கள் 
மாண்டுவிட நீதியுண்டோ

தாலி கட்டிய ராசாக்கள் 
தரையில் விழலாச்சே 

மங்கலியம் உண்டு
மனம் உண்டு என்றிருந்தேன் 

உலகத்துப் பெண்டுகள் 
ஒருவனுக்குக் கை கொடுப்பார் 

ஐவருக்குக் கை கொடுத்து 
அம்பலத்துக்கு ஆளானேன் 

ஆரைக் கழுத்தி 
அரைக் கழுத்தி ஆனேனே 

கோரைக் கழுத்தி 
குரைக்கழுத்தி ஆனேனே 

தங்கக் கழுத்தி 
தலை விரிக்க நாளாச்சே 

மல்லிகைச் சாலையிலே 
மயிர் விரிக்க நாளாச்சே 

குங்குமச் சாலையிலே 
குழல் விரிக்க நாளாச்சே 

ஐயையோ தெய்வமே
அநியாயம் செய்தீரே 

தோள் சேர்ந்த ராசாக்கள்
சோர்ந்துவிடக் காரியமேன் 

மார் சேர்ந்த ராசாக்கள்
மடிந்துவிடக் காரியம் ஏன் 

மஞ்சள் இழந்தும் 
மணம் இழந்தும் பூ இழந்தும் 

தாலிச் சரடு இழந்து 
தரையிலே நிற்பேனோ 

தருமர் சொல்கிறார் 

நாமும் இந்த நீரைக் குடித்தோமே
சாகாமல் இருக்கிறோமே 
நாமும் மடிந்தால் நல்லது 

இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தனர் 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

பாண்டவரைக் கொல்ல, காளமகா ரிஷியால் அனுப்பப்பட்ட வேதாளம், பாண்டவர் இறந்து கிடந்ததால், தன்னை அனுப்பிய முனிவரையே கொன்றது. 




No comments:

Post a Comment