5.7.
கார் எட்டு
- கார் காலத்தில் தோன்றும் மேகம், இடி, மின்னல், பூக்கும் மலர்கள் எல்லாமே சிவன் உருவத்தை நினைவூட்டுகின்றன.
- The clouds, thunder, lightning, and blooming flowers that appear during the rainy season—all of them evoke the form of Lord Shiva.
492
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்கும் கார். 1
- சிவன் தன் இடையில் கட்டிய புலித்தோல் ஆடை நழுவாமல் இருக்க, பாம்பைக் கயிறாகக் கட்டியிருப்பவன்.
- கார்மேகம் அவன் சடை நிறத்தில் மின்னிற்று.
- சங்கு போல் முழங்கிற்று.
- பாம்பு இனங்கள் அச்சத்தால் பதுங்கிக்கொண்டன
493
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார். 2
- சிவன் ஐந்தலை நாகத்தை அணிகலனாகப் பூண்டவன்
- மேகம் அவன் மணிமிடறு போல் கருநிறம் கொண்டிருக்கும்
- அவன் கையிலிருக்கும் வில் போன்ற மின்னலால் பிளக்கும்
- அவன் சடை நிறம் காட்டி மின்னும்
- அவன் கழலும் மின்நிறம் கெற்றிருக்கும்
494
ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல
இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம்
கருண்டொன்று கூடுதலிற் கார். 3
- மேகம் கறுப்பு
- அரன் மணிமிடறு போல் கறுப்பு
- அவன் ஏறு போல் வானில் செல்லும்
- இரண்டொரு மின்னல்களைத் தோற்றுவிக்கும்
495
இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைமேல் மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார். 4
- மேகம் சிவன் கண்டம் போல் இருண்டிருக்கும்.
- அவன் சடை போல் மின்னும்
- அப்போது அஞ்சும் பாம்பு படம் எடுக்காது
- மூங்கில் தீப்பற்றி எரியும்
496
கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்
றாடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார். 5
- கார் காலத்தில் கோடல் மலர் பூக்கும்
- குன்றிமணி காய்க்கும்
- இடி மின்னலில் பாம்பு பதுங்கிகொள்ளும்
497
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்
அரவஞ் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார். 6
- சிவன் பாசுபதம் தருபவன்
- அவன் சடை, ஆத்திமாலை போல் கார்கால மின்னல் தோன்றும்.
- அரவினம் நகர அஞ்சும்
498
செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார். 7
- சிவன் தழல் வண்ணன்
- அவன் சடைபோல் மேகம் மின்னும்
- பொருளுக்காகப் பிரிந்திருக்கும் காதலரின் அன்பை அளவிடுவதற்காகக் கார்காலம் வரும்.
499
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார். 8
- கார்மேகம் சிவன் கண்டம் போல் இருண்டிருக்கும்.
- காந்தள், கொன்றை, தளவம் பூக்கும் பருவம் கார்காலம்.
திருச்சிற்றம்பலம்
நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் --- 11 ஆம் திருமுறை
No comments:
Post a Comment