4
அந்தி மாலை நேரம்
மாலைப் பொழுது. கணவன் இல்லாமல் கண்ணகி கலங்குகிறாள். மாதவி கோவலனுடன் குலாவுகிறாள்.
மாதவி நிலா முற்றத்தில் கோவலனுக்குக் கலவியும் புலவியும் அளித்துக்கொண்டிருக்கிறாள்.
காதல் மடந்தை கணவன் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
கண்ணகி காலில் சிலம்பு, கழுத்தில் தாலி மட்டும் அணிந்தவளாக, பிற அணிகலன்கள் ஏதுமில்லாமல், கண்ணுக்கு மை தீட்டாமல், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளாமல், தலைக்கு எண்ணெய் வைக்காமல் நெஞ்சில் கவலையுடன் இருக்கிறாள்.
காதலரைப் பிரிந்த மகளிர் ஏக்கத்தில் கொல்லன் துருத்தி போல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அரசனின் வெண்கொற்றக் குடை சேர்ந்தவர்க்கு நிழல் தந்து, சேராதவர்க்கு உதவாதது போல இரவுப் பொழுது கழிந்துகொண்டிருந்தது.
5
இந்திர விழா
கடலில் கப்பல், கரையில் யவனர் முதலானோர் வாழும் மாடங்களைக் கொண்ட இடம் புகார் நகரத்தின் மருவூப் பாக்கம்.
அரசு சார் பெருங்குடி மக்கள் வாழும் இடம் புகார் நகரின் பட்டிப்பாக்கம்
புகார் நகரில் இந்த இரு பகுதிகளுக்கு இடையில் இருப்பது நாளங்காடி. இங்குள்ள மர நிழலில் வாணிகம் நடக்கும்.
வேந்தனுக்கு வெற்றி தரவேண்டும் என்று வேண்டி இங்குள்ள பூத மேடையில் பலி கொடுப்பர்.
அரசன் திருமாவளவன் தென்னகத்தில் தன்னை எதிர்த்துப் போரிட யாரும் இல்லாததால் போரிடுவதற்காக வடதிசை நோக்கிச் சென்றான். இமயத்தில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்துவிட்டு மீண்டான். இதன் நினைவாக, வச்சிர நாட்டு வேந்தன் புகார் நகரில் "கொற்றப் பந்தல்" என்னும் மண்டபம் கட்டித் தந்தான். மகத வேந்தன் "பட்டி மண்டபம்" கட்டித் தந்தான். அவந்தி நாட்டு வேந்தன் "தோர்ரணவாயில்" கட்டித் தந்தான். இங்கெல்லாம் இந்திரனின் வச்சிராயுதம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு இந்திர விழாவுக்குக் கால்கோள் விழா நடைபெற்றது.
திருடர் தண்டனையை நிறைவேற்றும் வெள்ளிடை மன்றம். ஊனமுற்றோர் நீராடினால் ஊனம் போகும் இலஞ்சி மன்றம், நஞ்சு தீர்க்கும் நிழல் தரும் தூண் நிற்கும் நெடுங்கல் மன்றம், கயிற்றைக் காத தூரம் வீசிக் குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்கும் பூதம் இருக்கும் பூதச் சதுக்கம், அரசன் நீதி தவறினால் கண்ணீர் உகுத்துக் காட்டித்தந்து நிற்கும் பாவை மன்றம், - ஆகிய ஐவகை மன்றங்களில் பொங்கல் வைத்துப் படைத்து விழாக் கொண்டாடினர்.
இந்திரன் கோயிலுக்கு வச்சிரக் கோட்டம் என்று பெயர். இந்தக் கோயில் முரசை யானைமேல் ஏற்றி அடித்துக்கொண்டு சென்று, விழா தொடங்கும் நாள், நிறைவுறும் நாள் ஆகியவை அறிவிக்கப்பட்டன. கற்பக மரம் இருக்கும் அந்தக் கோயிலின் கொடி ஏற்றப்பட்டது. முளைப்பாலிகை, விளக்கு, பட்டுத்துணிக் கொடி முதலானவற்றால் மக்கள் தெருக்களை அழகுபடுத்தினர்.
ஐம்பெருங்குழு, எண்பேராயம், மற்றும் அரசனைச் சார்ந்தோர் அனைவரும் ஒன்று திரண்டனர். அரசன் "வெல்லவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு இந்திரன் சிலையை 1008 குடம் காவிரி நீர் ஊற்றி நீராட்டினர்.
![]() |
| இந்திரனை நீராட்டினர் படம் AI creation |
சிவன், முருகன், பலராமன், திருமால், அரசன் அரண்மனை ஆகிய இடங்களிலெல்லாம் நான்மறையாளர் தீ வளர்த்து யாகம் செய்தனர். நான்கு
தெய்வங்கள், 18 தேவ கணங்கள் இருக்கும் கோயில்களிலும் விழா நடைபெற்றது. கோயில் மண்டபங்களில் தான தருமங்கள் நடைபெற்றன. சொற்பொழிவுகளும் நடந்தன. சிறை செய்த அரசர்களை அரசன் விடுதலை செய்தான். இசைக்கருவிகள் முழங்கின. ஊரே களிப்பில் மூழ்கியிருந்தது.
மாதவியும் மற்றவர்களும் ஒப்பனை செய்துகொண்டு நாளங்காடி பூங்கா வந்தனர். எங்கும் மணப்புகை. தென்றல் சுகம்.
தெருக்களில் உலாவிய பரத்தையரை ஆடவர் பாராட்டினர்.
பாராட்டியவர் வீட்டுள் நுழைந்ததும் மனைவியர் ஊடினர்.
புணர்ச்சித் திளைப்பில் மாதவியின் கண்கள் சிவந்திருந்தன. அவளுக்கு நிகழவிருக்கும் தீங்கினை அறிவிக்கும் குறியாக அவளது வலக்கண் துடித்தது. கண்ணகிக்குப் புணர்ச்சி இல்லாமையால் அவள் கண்கள் இயல்புக் கருமை நிறம் கொண்டிருந்தது. இவளுக்கு நன்மை விளையவிருக்கும் அறிகுறியாக இவளது இடக்கண் துடித்து. (இந்திர விழா 27 நாள் நடக்கும்) அன்று இந்திர விழா நடக்கும் முதல் நாள்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.

No comments:
Post a Comment