பாண்டின் செங்கோல்
சாலினி தன் வேடத்தைக் கலைத்துவிட்டு, கவுந்தியடிகளை வணங்குகிறாள். கண்ணகியின் மென்மையைச் சொல்கிறாள். பாண்டியன் ஆட்சியைப் பாராட்டிப் பேசுகிறாள். இப்போதுள்ள பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கரடி உணவுக்காகக் கறையான் புற்றை அகழாது. மானை வேட்டையாடாமல் வேங்கை சேர்ந்து வாழும். பாம்பும், முதலையும் பிறருக்குத் துன்பம் செய்வதில்லை. பகலிலும் இரவிலும் எங்கும் செல்லலாம்.
இரவில் நடந்தனர்
நிலவொளியில் தென்றல் வீசிற்று.
புலி கரடி கோட்டான் போன்றவை ஒலிக்காமல் இருக்குமாறு கவுந்தியடிகள் ஆணையிட்டு அடக்கினார். அந்த இரவு நேரத்தில் நடந்து மூவரும் பார்ப்பனர் வாழும் இடத்தை அடைந்தனர்.
மாதவி கடிதம்
நீராடுவதற்காகக் கோவலன் தனியே சென்றான்.
வெயிலில் வெந்த கோவலன் உருவத்தில் மாற்றம் இருந்தது. உண்மை அறியும் உள்ளத்தோடு அங்கே படர்ந்திருந்த முல்லைக் கொடியோடு கோசிகமாணி என்னும் அந்தணன் பேசிக்கொண்டிருந்தான். "கோவலனைப் பிரிந்து வாடியிருக்கும் மாதவி மடந்ததை போல நீயும் வாடியிருக்கிறாயே" என்றான்.
அதைக் கேட்ட கோவலன் "என்ன சொல்கிறாய்? நீ யார்?" என வினவினான். கோசிகமாணி கூறினான். "தாயும் தந்தையும் ஆள் அனுப்பிக் கோவலனைத் தேடினர். கிடைக்காமல் வருந்திக்கொண்டிருக்கின்றனர். இதனைக் கேட்ட மாதவி வாட்டத்துடன் படுத்துக் கிடந்தாள். அதனை அறிந்த நான் ஆறுதல் கூற அவளிடம் சென்றேன். அவள் கடிதம் ஒன்று எழுதினாள். ‘என் கண்மணி போன்றவர்க்கு இதனைக் காட்டு’ என்று சொல்லிக் கடிதத்தை என்னிடம் கொடுத்தாள். உன்னைத் தேடினேன். கண்டுகொண்டேன்" என்று சொல்லிக் கடிதத்தைக் கோவலனிடம் கொடுத்தான்.
கடிதச் செய்தி
- கடித ஓலையில் அவள் கைமணம் கமழ்ந்தது. வாங்கிப் படித்தான். "வணங்குகிறேன். மனக்குழப்பத்தில் நான் கூறும் சொற்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பெற்றோருக்கும் தெரியாமல் இரவு வேளையில் ஊரை விட்டுப் போகும்படி நான் என்ன தவறு செய்தேன் என்று புரியவில்லை" - என எழுதப்பட்டிருந்தது. மாதவியிடம் தவறு ஒன்றும் இல்லை என உணர்ந்துகொண்டான்.
கோவலன் பெற்றோருக்கு
- "என் பெற்றோர் கையில் இந்தக் கடிதத்தைக் கொடுத்து நான் தொழுதேன் என்று சொல்" என்று சொல்லி, கோவலன், கடிதத்தை கோசிகமாணியிடம் கொடுத்து அனுப்பினான்.
பாணர்களுடன் யாழ்
கவுந்தி அடிகளுடன் இருந்த மனைவியிடம் மீண்டான். அங்குப் பாணர்கள் யாழ் மீட்டிப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து செங்கோட்டியாழை இசைத்து, கொற்றவையை வாழ்த்தும் பாடல்களைப் பாடினான்.
மதுரை தொலைவு
- மதுரையை அடைய எஞ்சியுள்ள தூரம் பற்றி அந்தப் பாணர்களிடம் கேட்டறிந்தான். மதுரை மணப்புகை மணம் அங்கு வீசுவதைச் சுட்டிக் காட்டி அருகில் இருப்பதை அவர்கள் தெரிவித்தனர்.
- மதுரை முழக்கங்களை அங்குக் கேட்க முடிந்தது.
- செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒரு குலப்பெண் போலக் கண்டனர்.
படகில்
- படகில் ஏறி, மதுரை இருக்கும் வைகையின் தென்கரையை அடைந்தனர்.
- "வரவேண்டாம்" என்று சொல்வன போன்று மதுரையின் கொடிகள் அசைந்தன.
புறஞ்சேரி
- மதுரைக்குப் புறச்சிறகு போல் அமைந்திருந்த புறஞ்சேரிப் பகுதியில் அவர்கள் தங்கினர்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment