Pages

Wednesday, 18 March 2026

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்னும் மறைபொருள் தொடர்களைச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்தக் குறியீடுகளின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவை இறைநிலையை உணர்த்துவன. 


சமயம் சாராதவர்


சித்தர்கள் சமயம் சாராதவர்கள். இறைவனை உணர்ந்தவர்கள். இறைவனை நமக்குக் காட்டுபவர்கள். 

சித்தர்கள் ஓம் என்னும் ஓரெழுத்தையும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தையும் மந்திரமாகக் காட்டுவது உண்மையே. ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்ததையும் காட்டுகின்றனரே. 

உள்ளம் பெருங்கோயில், உயிர் சிவலிங்கமாக இருக்கும் தெய்வம். நம் கள்ளப்புலன்கள் ஐந்தும் அவனை நமக்குக் காட்டுவதிலை. - எனக் கண்டவர் சித்தர்.

நமக்குத் தெரிந்த முதல் சித்தர் திருவள்ளுவர். அவர் நமக்கு இறைவனைக் காட்டுகிறார். 

சாகாத் தலை


  • இறைவன் நம்மிடம் நாம் எண்ணும் குணமாக இருக்கிறான். ("எண்குணத்தான்"). எண்குணம் என்பது எண்ணப் பண்பு. நினைத்துப் பார்க்கும் செயல். நினைத்துப் பார்க்கும் ஆற்றலில்தானே இறைவன் இருக்கிறான்? எண்ணம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. 
  • எண்ண ஆற்றல் தலையில் இருக்கிறது. இந்த ஆற்றல் மாறலாம். உடலில் உயிருள்ளவரையில் சாவதில்லை. - எண்ணமே சாகாத் தலை. 

வேகாக்கால் 


  • கால் என்பது காற்று. காற்று மூச்சின் வழியாக நம் உடலுக்குள் சென்றுவருகிறது. இது உடலின் வெப்பத்தை 37 டிகிரி செல்சியஸ் என்று ஒரே சீராக வைத்திருக்கிறது. வெயிலின் வெப்பத்தால் இந்தக் காற்று வேவதில்லை. எனவே, நம் மூச்சுதான் வேகாக் கால்.  

போகாப்புனல்


  • புனல் என்பது நீர். நீர் நிலத்தில் ஓடிப் போகும். நம் உடம்பில் இருக்கும் நீர் (60%) உடலை விட்டு எங்கும் போவதில்லை. இது போகாப் புனல். 

சித்தர் வாக்குகள் 


பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே - வள்ளலார்

  • உடலிலுள்ள 37 டிகிரி கனலுக்குப் புகை  இல்லை
  • உடலை விட்டுப் போகாத நீர் உடலுக்குள்ளே இருக்கிறது. 
  • நோயில் வேறுபட்டாலும் தன்னிலைக்குத் திரும்பிவிடும் வேகாத காற்று நம் உடலுக்குள் இருக்கிறது. 

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே . - திருமூலர்.

  • கலம் என்பது பாண்டம். அதற்குத் தன்னுள்ளே இருக்கும் பொருளின் பெருமை தெரியாது. இப்படிக் கலம் போன்று இருப்பவர் கலதிகள். 
  • கால் என்பது சக்தி. பளுவைத் தூக்கும்போது மூச்சை உள்ளே கட்டிக்கொண்டு தூக்குவர். இதில் காற்றின் வலிமையை உணர்கிறோம். சத்தி என்னும் பெண்மையின் அருள்தான் அந்த சக்தி. 
  • உடலில் ஊறும் பாலின் வழியே (விதியின் வழியே) ஒருவனுக்கு ஞானமும் பண்பும் அமையும். 
  • இப்பபடிச் சூழல் தாக்கக்  காற்றாவும், ஊழ் என்னும் பாலின் ஊறலாகவும் அமைவதே "வீடு". 
  • கலதிகளுக்கு இது தெரியாது.

அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே - திருமூலர்

  • நம் உடம்பு ஆறு
  • அதில் "உணர்வு" என்னும் அமுதப் புனல் ஓடும்
  • ஐம்புலன்காக ஓடும் 
  • உணர்வுகளைச் சமைத்துப் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்பவருக்கு நமன் என்னும் அச்சம் இல்லை. 
  • நல்ல நாள் என்று ஒன்று இல்லை. 

சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.     - வள்ளலார் 

  • மேலே நாம் கண்டபடி வேகாத கால், சாகாத தலை ஆகியவற்றை உணர்ந்துகொண்டால், அதுவே சாகாத கல்வி. 

No comments:

Post a Comment