Pages

Monday, 9 March 2026

புகைக்கொடி

புகைக்கொடி என்பது  விளக்கு எரியும்போது தோன்றும் புகை. நூல் எழுதும் புலவர்கள் அவையடக்கம் கூறும்போது இதனை உவமையாகக் காட்டியுள்ளனர். 

விளக்கு எரியும்போது அதில் புகை வரும். வெளிச்சம் வேண்டும். புகை வேண்டாத ஒன்று. வேண்டாத புகை வந்தாலும் வெளிச்சம் தரும் விளக்கை விரும்பத்தான் செய்வர். அதுபோலத் தம் நூலிலுள்ள குறைகளை நினைக்காமல், சொல்லப்படும் பொருளின் சிறப்பு கருதித் தன் நூலை ஏற்றுக்கொள்வர் என்னும் கருத்துப்படப் பாடுவது புலவர் வழக்கம். இதனை இந்தப் பாடல்கள் தெரிக்கின்றன. 

உள் விரிந்த புகைக்கொடி உண்டு என
எள்ளுகின்றனர் இல்லை விளக்கினை
உள்ளுகின்ற பொருள் திறம் ஓர்பவர் 
கொள்வர் எம் உரை கூறுதல் பாலதே  (யசோதர காவியம்)

புகைக்கொடி உண்டு என்றே பொற்பு நல் ஒளி விளக்கை 
இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டு நல் பொருள் உணர்ந்தோர் 
அகத்தினி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லை 
செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலதாமே (நாக குமார காவியம்)   

வானில் தோன்றும் வால்-நட்சத்திரத்தைப் புகைக்கொடி என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 130

No comments:

Post a Comment