பிரியமாட்டோம்
அவனும் அவளும் யாருக்கும் தெரியாமல் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தனர். இருவருக்குமே அது முதல் உறவு.
உறவுக்குப் பின் அவர்கள் பிரிகின்றனர். மீண்டும் ஒன்று சேர்வோமோ என்று எண்ணி அவள் கலங்குகிறாள். அவன் அவளைத் தேற்றுகிறான்.
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்' என்கிறான்.
- சிறு காரோடன் - மணிக்கல்லுக்குப் பட்டை தீட்டுபவன்
- பயின் - அரக்கு
- பொதினி - பழனி
🍪
இக்காலத்தில் கடவுள் முருகன் குடிகொண்டுள்ள பழனிமலை சங்ககாலத்தில் பொதினி என்னும் பெயரைக் கொண்டிருந்தது.
அதனை முருகன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான்.
குதிரை போல் உருவம் கொண்டது குதிரைமலை. அந்த நாட்டின் குடிமக்கள் மழவர்.
அவர்கள் பொதினி முருகனைத் தாக்கினர்.
தாக்கிய மழவரை இந்த முருகன் வென்றான். அவர்களின் நாடு வரையில் துரத்திச் சென்றான்.
🍪
இந்த முருகன் ஆண்ட பொதினி நகரில் மணிக்கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது.
பட்டை தீட்டும் மணிக்கல்லை மூங்கில் சிம்பு ஒன்றன் நுனியில் அரக்கு வைத்துப் பதித்திருப்பர். சாணைக்கல்லில் மணிக்கல்லை உரசிப் பட்டை தீட்டும்போது அந்தக் கல் அரக்கின் பிடியிலிருந்து விடுபடாது.
அந்தக் கல்லும் அரக்கும் போல நாம் பிரியமாட்டோம் என்று அவன் அவளிடம் சொல்லி அவளைத் தேற்றுகிறான்.
![]() |
| சிறு காரோடன் |
🍪
''வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், --- உருவக் குதிரை மழவர் ஓட்டிய --- முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, --- அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், --- சிறு காரோடன் பயினொடு சேர்த்திய --- கல் போல் பிரியலம்'' என்ற சொல்தாம் --- மறந்தனர்கொல்லோ தோழி! --- பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது --- மாமூலனார் --- அகநானூறு பாடல் 1 --- பாலை

தமிழன்னைக்கு அரும்பெரும் தொண்டாற்றுகிறீர்கள் அய்யா. நனி சிறப்பு. 🌿🙏🏻
ReplyDeleteதங்கள் வாழ்த்து அடியேன் 90 வயது கிழவனை ஊக்குவிக்கிறது.
Deleteஅய்யா. மாமூலனாரின் பாடல்களைத் தேடி உங்கள் வலைப்பதிவை அடைந்தேன். மிகவும் அருமையான தொண்டினைச் செய்கிறீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteகுறிப்பாக பயினொடு சேர்த்திய கல் என்ற தொடருக்கு நீங்கள் கொடுத்த பொருள் மிகவும் நேரடியாக இருக்கிறது. பழனியில் இப்படி பட்டைதீட்டுவதைக் கண்டிருப்பதாகக் கூறுவது மிகவும் வியப்பான ஒன்று. சங்ககாலத் தொழில் ஒன்று இன்றும் அங்கு நிலை பெற்றிருப்பது நல்ல சான்று.
உங்களுக்கு இயற்கை இவ்வரும் பணியைத் தொடர நல்லாற்றலை நல்கட்டும். நன்றி!
வாழ்த்துக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
Deleteஐயா மிக சிறந்த தொகுப்பு . தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் (Apr 23, 2026, 12:33 PM )அனுப்பி உள்ளேன் , தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி
Deleteநல்லது
Delete