நரசிங்க முனையதரையன் மனைவி பாடல்
வடித்த வேல் முனையர்கோன் வழுதி மாநகர்
இடித்தபோது, எதிர் முதுகிட்ட மீனவன்
வெடித்த வேல் அடவியை மிதித்த தாள், கடல்
குடித்ததே ஆயினும் கொப்புளித்ததே.
நரசிங்க முனையதரையன் என்பவன் விக்கிரம சோழனின் படைத்தலைவரில் ஒருவன். ஒட்டக்கூதர் பாடிய விக்கிரம சோழன் உலாவில் இவன் குறிப்பிடப்படுகிறான். இவன் போரில் தாக்கியபோது பாண்டியரில் ஒருவனான வல்லபன் (1118) தோல்வியுற்று, புறமுதுகு காட்டி வேல் போல் மண் வெடித்துக் கிடக்கும் காட்டில் ஓடினான். அப்போது வெயில் சுடும் பொடியில் அவன் கால்களில் கொப்புளங்கள் தோன்றின.
பாண்டியன் கால்களில் கொப்புளங்கள். பண்டைய பாண்டியருள் ஒருவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். இவன் கால்கள் கடல்நீரைக் குடித்ததன. கடல்நீரைக் குடித்த கால்களில் சூட்டுக்கொப்புளங்கள். இது விந்தை. பாடல் இப்படிக் கூறுகிறது.
இந்த முனையர்கோன் திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்தவன். இக்கால மாவட்டக் கலெக்டர் போல் சோழர் ஆட்சியில் விளங்கியவன். அவ்வூர் சௌரிராசப் பெருமாள்மீது பற்று கொண்டவன். நாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் (1129) அரசனுக்குத் தரவேண்டிய வரிப்பணத்தைக்கொண்டு மக்களைக் காப்பாற்றினான்.
0
அப்போது ஒரு போர் மூண்டது. சோழன் அவனைப் போருக்கு அனுப்பினான். போரிட்டுகொண்டிருந்த கணவனுக்கு மனைவி ஓலை அனுப்பினாள். இது அந்த ஓலையில் அனுப்பிய பாடல்.
இன்று வரின் என் உயிரை நீ பெறுவை; இன்றைக்கு
நின்று வரின் அதுவும் நீ அறிவை - வென்றி
முனையா! கலவி முயங்கியவாறு எல்லாம்
நினையாயோ நெஞ்சத்து நீ. (தாதி என்பவன் பாடினான் என்று இந்தப் பாடலை, தமிழ்நாவலர் சரிதை குறிப்பிடுவது பொருந்தாது)
ஓலையைக் கண்டதும் முனையதரையன் இல்லம் திரும்பினான். மனைவி மகிழ்ந்தாள். நெய்ப்பொங்கல் வைத்தாள். சௌரிராசப் பெருமானுக்குப் படைத்த பின் கணவனுக்குப் படைத்தாள்.
பாலும் அரிசியும் பசும்பயறும் பாகமாகவே விரவி
ஏலம் இழுதும் சருக்கரையும் இட்டு உண்ணும்போதில் அன்னான்
சால மதுரம் என்ன அவை சவுரிராசனுக்கே தகும் -- என்றான் ( இது புராணப் பாடல்)
பொங்கலைச் சவுரிராசப் உண்டார். தன் மேனியிலும், கோயிலிலிந்து அவன் வீடு வரையிலும் பொங்கல் சிதறிக் கிடக்குமாறு செய்தார். முனையதரையன் கோவிலுக்கு நிலமும், நிவந்தங்களும் வழங்கினான். அன்று முதல் கோயிலில் மதியம் முனையதரையன் பொங்கல் என்னும் பெயரில் படையல் நடந்துவருகிறது.
இதனைச் சோழமண்டலம் சதகம் பாடல் ஒன்று (39) குறிப்பிடுகிறது.
புனையும் குழலாள் பரிந்து அளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அருந்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறும் முது சீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ ம்மண்டலமே.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 311
No comments:
Post a Comment