எழுத்து - சொல் - பொருள்
அறம் - பொருள் - இன்பம்
இவற்றில் பொருள் என்பது என்ன?
தமிழ் மொழியை ஆராயும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று பகுத்துக்கொண்டுள்ளது. இதில் பொருள் என்பது செல்வம் அன்று. இலக்கியங்களில் சொல்லப்படும் கருத்து.
வாழ்க்கை இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் பகுத்துக்கொண்டுள்ளது. திருக்குறளில் உள்ள பொருட்பால் அரசியலையும், பொதுவாழ்க்கையையும் விளக்குகிறது. திருக்குறளில் கூறப்படும் இன்பம் வாழ்க்கையில் ஆண்பெண் வாழ்வில் துய்க்கும் இன்பம்.
தொல்காப்பியம் இலக்கணம்.
திருக்குறள் இலக்கியம்.
இலக்கியப் பொருளை விளக்குவதே தொல்காப்பிம் கூறும் பொருள் அதிகாரம். இது வாழ்க்கைப் பொருள். வாழ்க்கையாகிய பொருள்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. இவை ஆண் பெண் காதல் வாழ்க்கை பற்றியும், பொதுமக்களின் வாழ்க்கை பற்றியும் , இவை சொல்லப்பட்ட முறைமை பற்றியும் பேசுகின்றன.
- அகத்திணை - காதலர் வாழ்வின் கருத்தோட்டம்
- புறத்திணை - போரும், பொதுவாழ்வும்
- களவியல் - திருமணத்துக்கு முன் காதலர்
- கற்பியல் - திருமணத்துக்குப் பின் காதலர்
- பொருளியல் - வாழ்க்கையின் துணுக்குச் செய்திகள்
- மெய்ப்பாட்டியல் - மாந்தரின் உணர்வுகள்
- உவம இயல் - தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு காட்டும் முறை
- செய்யுளியல் - பாடல் பதிவுகள்
- மரபியல் - மரபுச் சொற்களும், மரபுக் கோட்பாடுகளும்.
தொல்காப்பியம் கி மு 711 என்பது இந்திய அரசின் தொல்காப்பியர் விருது பெற்ற அறிஞர் தமிழண்ணல் அறிஞர்களைக் கூட்டி ஆராய்ந்து கணித்ததார்.
யாமும் அந்தக் கருத்தினை வழிமொழிகின்றேன்.
தொல்காப்பியம் தோன்றி வழங்கிய பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பொருள் இலக்கணம் பல பிரிவுகளில் தோன்றலாயின..
இறையனார் களவியல் உரை, நம்பியகப்பொருள் ஆகிய நூல்கள் அகப்பொருளுக்கு மட்டும் இலக்கணம் கூறின.
புறப்பொருள் வெண்பாமாலை புறப்பொருளுக்கு மட்டும் இலக்கணம் கூறிற்று. தொல்காப்பியம் 7 திணைகள் என வகுத்துக்கொண்டு கூறிய செய்திகளை இது 12 திணைகளாக மாற்றிக்கொண்டு இலக்கணம் கூறுகிறது.
யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் தொல்காப்பியம் யாப்பியலில் கூறப்பட்ட பாட்டிலக்கணம் பற்றிய செய்திகளைப் புதிய கோணத்தில் தெரிவிக்கின்றன.
தண்டியங்காரம், மாறனலங்காரம் முதலான நூல்கள் தொல்காப்பியம் உவம இயலில் உள்ள செய்திகளின் விரிவாகத் தோன்றின. இவை அணியிலக்கணத்தை அலங்காரம் என்றன. தொல்காப்பிய உவம இயல் செய்திகள் தமிழ் இலக்கியப் பாங்கினை அடிப்படையாகக் கொண்டவை. அலங்கார நூல்கள் வடமொழி இலக்கணத்தைத் தழுவித் தமிழில் அணிகளை உருவாக்கியுள்ளன.
தமிழ் மொழி அமைந்திருக்கும் பாங்கை உணர்த்தும் பகுதி.
A section that reflects the style in which the Tamil language is situated.
No comments:
Post a Comment