அன்புடைமை
வித்துரை
- அன்பு பாய்வதை அடைக்க முடியாது
- அன்புடையார் அனைத்தும் தருவர்
- அன்பு உயிரில் கலந்தது
- அன்பு, ஆர்வம், நட்பு – தாத்தா, மகன், பிள்ளை
- அன்பு தந்து இன்பம் பெறு
- அன்பு துன்புறுத்தினாலும் அரவணைக்கும்
- அன்பு உடலிலுள்ள எலும்பு போன்றது
- அன்பில்லாதவர் பட்டுப்போன மரம்
- அன்பு உடலுக்குள் இருக்கும் உறுப்பு போன்றது
- அன்பினால் உயிர் தோன்றும்
தொகுப்புரை
அன்புடைமை
- அன்பை அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் இல்லை. அன்புடையவரின் மென்மையான கண்ணீர் அவரது அன்பை வெளிப்படுத்திவிடும்.
- அன்பு இல்லாதவர் அவருக்கு மட்டுமே உரியவர்; அன்புடையவர் தன் எலும்பையும் பிறருக்குப் பயன்படுமாறு செய்வர்.
- அரிய உயிருக்கு அது இருக்கும் உடலிலிலுள்ள எலும்போடு என்ன தொடர்பு இருக்கிறதோ, அதே தொடர்புதான் அன்புக்கும் இருக்கிறது.
- அன்பு ஆர்வம் என்னும் செல்வத்தைப் பெற்றெடுக்கும். அந்த ஆர்வச் செல்வம் தானே நாடிவரும் நட்பு என்னும் சிறப்பினைப் பெற்றெடுக்கும்.
- உலகில் ஒருவர் இன்புறும் சிறப்பினைப் பெற்றிருக்கிறார் என்றால், அது அவர் காட்டும் அன்பினால் தானே வந்து அமர்ந்திருக்கும் பேறு.
- அன்பு அறத்தைச் சார்ந்த ஒன்று கூறுவர். அறியாதவர் செய்யும் மறச் செயலுக்கு உதவுவதும் அதுதானே?
- எலும்பு இல்லாத மண்புழுவை வெயில் காய்ச்சுவது போல, அன்பில்லா உயிரை அறம் காய்ச்சும்.
- வறண்ட பாறை நிலத்தில் பால் வற்றிப்போன மரம் தளிர்க்குமா? அதுபோல அன்பு இல்லாத உயிரும் தழைக்க முடியாது.
- உடலுக்குள் இருக்கும் மூளை முதலான அக உறுப்பு போன்றது அன்பு. அது இல்லாவிட்டால் கை, கால் போன்ற புற உறுப்புக்கள் எல்லாம் என்ன செய்ய முடியும்?
- உயிரின் நிலைப்பாடு அன்பினைப் பின்தொடரும். அன்பு இல்லாவிட்டால் ஒருவனது உடல் அவனுக்கு இருப்பது எலும்பும் தோலும் போர்த்திய பிணம் போன்ற உடம்பு.
திருக்குறள்
அன்புடைமை
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் \ புன்கணீர் பூசல் தரும். 71
- அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் \ என்பும் உரியர் பிறர்க்கு. 71
- அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு \ என்போடு இயைந்த தொடர்பு. 73
- அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் \ நண்பென்னும் நாடாச் சிறப்பு. 74
- அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து \ இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75
- அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் \ மறத்திற்கும் அஃதே துணை. 76
- என்பி லதனை வெயில்போலக் காயுமே \ அன்பி லதனை அறம். 77
- அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் \ வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
- புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை \ அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79
- அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு \ என்புதோல் போர்த்த உடம்பு. 80
No comments:
Post a Comment