கருமையான அடிமரம் கொண்டது வேங்கை மரம்.
அதன்
பூக்கள்
கம்மியன் செய்த பொன்னணி போல் தோன்றும்.
அன்று பூத்த புத்தம்புது வேங்கை மலரைத்
தக்க வனப்புடன்
தழைத்த கூந்தலில் சூடிக்கொண்டிருக்கிறோம்.
கண்டதும் காதல் கொண்டு
அதனை
அடக்க முடியாமல்
அவன் என்னை மணந்தான்.
அவனுக்கு இனி நான் எப்படிப் பயன்படப் போகிறேன்?
தோழி!
கமழும் காந்தள் பூக்குலை மலர்ந்து
நலம் தரும் சோலையில்,
கூதளம் பூ பூத்துக்கிடக்கும்
பொழிலில்
அவன் என்னை மணந்தான்.
இனி அது தனிமைப்பட்டுக் கிடக்கப்போகிறது.
ஊருக்கே சென்று தங்கிவிடுவோம் போலத் தோன்றுகிறது.
தினையின் இலைகள்
அருவி போல் வெண்ணிறத்துடன் காய்ந்துவிட்டன.
கொய்யும் பதத்துக்கு வந்துவிட்டன.
தினை
கொய்த பின்னர்
நாம் இங்கு வரமாட்டோம் அல்லவா?
அவனுக்கு
இனி நான்
எப்படிப் பயன்படப் போகிறேன்,
என்று தலைவி
தோழியிடம் சொல்கிறாள்.
தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கும்
தலைவன்
திருமணம் செய்கொள்ளவேண்டும்
என்பது கருத்து.
ஒலித்தல் ஆனா = தழைக்க மாட்டாமல்
கடீயான் = மணந்தான், தழுவிக்கொண்டான்
கண் அழி கட்டு அழித்து = கூந்தலின்
கண்ணே அழிந்து கிடக்கும் சிக்கல்களை நீக்கி
கம்மியன் = பொற்கொல்லன்
கூம் = கிளியாட்டக் கூவும்
கைம்மிக = கட்டுக்கு அடங்காமல்
போக
தோடு = புல் வகைகளின் இலை
நயவரு = இன்பம் தரும்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி
கருங் கால் வேங்கை
நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன்
கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி
கட்டழித்து,
ஒலி பல் கூந்தல்
அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக
கடீஇயாற்கு 5
யாங்கு ஆகுவம்கொல்? தோழி!
காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த
நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில்
புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா, 10
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment