Pages

Saturday, 17 December 2016

நற்றிணை Natrinai 285

அவன் பாம்பு இரை தேடும் நள்ளிரவில் என்னை நாடி வருகிறான். 
அவன் குன்ற நாடன். 

கானவன் வில்லை வளைத்து 
ஆண் முள்ளம்பன்றியை எய்து எடுத்துக்கொண்டு 
தன்னைச் சுற்றிவரும் வேட்டை நாயுடன் 
மகிழ்வுடன் இல்லம் திரும்பும் குன்ற நாடு அது. 

கால் நட்டுப் புல் வேய்ந்த குடிசை கானவன் வீடு. 
இப்படிப்பட்ட கானவன் வாழும் நாடு அவன் நாடு. 

அவனுடன் நான் கொண்டுள்ள நட்பு மிகவும் நல்லதுதான். 
ஆனால் அவனையும் என்னையும் பற்றி 
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 
அலர் தூற்றுகின்றனரே! 

அதனை அவன் பொருட்படுத்தாமல் 
பட்டப் பகலிலேயே வருகிறானே! 

கானவர் யானையை ஓட்டக் 
கல்லைக் கவணில் எறியும் 
புனக்காட்டில் வருகிறானே!

தோழி! என்ன செய்யலாம்?

தலைவி வினவுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,          5
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி! என்றும்,
அயலோர் அம்பலின் அகலான்,               10
பகலின் வரூஉம், எறி புனத்தானே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, ''அம்ப லும் அலரும் ஆயிற்று'' என்று சொல்லியது.
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


நடுகால் குரம்பை 

No comments:

Post a Comment