Pages

Sunday 4 December 2016

நற்றிணை Natrinai 259

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

தோழி, 
என்ன செய்யலாம்? 

பொன்னிற வேங்கை பூவுடன் ஓங்கி வளர்ந்து 
மணம் கமழும் மலைச்சாரலில், 
இருண்ட புனக்காட்டுப் பகுதியில், 
பெருமலை நாடனோடு சேர்ந்து 

தினை உண்ணவரும் 
சிவந்த வாயை உடைய பச்சைக்கிளிகளை ஓட்டினோம். 

அங்குள்ள பெருமலை அடுக்கத்தில் உள்ள 
அருவியில் அவனோடு சேர்ந்து நீராடினோம். 

சாரல் பூக்களால் தொடுத்த மாலைகளை 
வண்டு மொய்க்குமாறு அணிந்துகொண்டோம். 

இப்படி விருப்பத்தோடு அவனுடன் உண்டான நட்பு 
இனி சிறிது காலத்துக்குக் 
கிடைக்காமல் போகும் போலத் தெரிகிறது. 

கடலில் அலை வந்து போவது போல 
நட்பும் வந்து போய்விடும் போலத் தெரிகிறது. 
வயலில் விளைந்திருக்கும் தினை விளைந்து கதிர் முற்றிவிட்டதே. 

அறுவடை செய்துவிடுவார்கள் அல்லவா? தினைப்புனம் காக்க வரமாட்டோம் அல்லவா? அவன் திருமணம் செய்துகொண்டால் நல்லது.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

யாங்குச் செய்வாம்கொல் தோழி! பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,    5
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன் விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?  10

தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.
கொற்றங் கொற்றனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கதிர் முற்றிய தினை 

No comments:

Post a Comment