Pages

Thursday 1 December 2016

நற்றிணை Natrinai 252

உலர்ந்தது போல் தோன்றும் ஓமை மரத்தில் 
இருக்குமிடம் தெரியாமல் ஒடுங்கிக்கொண்டு 
‘சில்வீடு’ என்னும் வண்டு ஒலிக்கும் வழியில் 
தொலைநாடு சென்று 
திறமையுடன் பொருள் தேடிக்கொள்ளாதவருக்கு 
வாழ்க்கை இல்லை 
என்று அவர் நெஞ்சம் அவரை இழுக்க (வலிப்ப) 
அவர் செல்லும்போது இடையே தடுத்து நிறுத்தக்கூடாது 
(வினையிடை விலக்கல்) 
என்று இவள் நினைத்தாள் போலும்.

கலை வேலைப்பாடு உள்ள சுவரில் 
வடிவமைக்கப்பட்டிருக்கும் புடைப்போவியம் போன்று 
அழகுடன் திகழ்பவள் இவள். 

நுட்பமாகப் பக்கம் உயர்ந்த அல்குலை உடையவள். 

இருள் நிற மலர் இதழ்கள் இரண்டைப் பிணைத்து வைத்தாற்போன்ற கண்கள் மட்டும் மழை பொழிகின்றன. 

முயல் வேட்டைக்கு முடுக்கிவிடப்படும் நாயின் 
நாக்குப் போன்ற மென்மையான உள்ளங்கால் அடிகளைக் கொண்டவள். 

பொம்மிய கூந்தலை உடையவள். 
அணிகலன் பூண்டவள். 

இவள் குணம் இப்படிப் பக்குவப்பட்டுக் காணப்படுகிறதே, 
என்று சொல்லித் தோழி தலைவியைப் பாராட்டுகிறாள்.

தலைவன் பொருள் தேடச் செல்லத் தலைவி தடை சொல்லக்கூடாது, அழக்கூடாது என்பன தோழியின் நோக்கம்.



பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

''உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்'' என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த    5
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்  10
நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே!

''பொருள்வயிற் பிரியும்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
அம்மெய்யன் நாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment