பள்ளி-மெத்தை
பலரும் பாராட்டும் சிறப்பும், அரசனே விரும்பிப் போற்றும் செல்வமும்
உடையவர்கள் பரதர் என்னும் வணிகர். இவர்கள் மிகுதியாக வாழும் பயன் தரும் நகரம்
புகார். உலகம் முழுவதும் ஒருங்கு வந்தாலும் விருந்தாகப் பேணி வழங்கத் தக்க அரும்பொருள்
வளம் மிகுந்த புதுமையான நகரம் அது. இந்தப் பொருள் வளம் கடல் வழியில்
மரக்கலத்தாலும், நிலத்தின் வழியே வண்டிகளிலும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவை. குலப்
பெருமையில் குன்றாத வளம் படைத்த செல்வர்கள் அங்கு வாழ்ந்துவந்தனர். அதே போல அரிய
தவத்தால் நிறைந்தவர்களும் அங்கு வாழ்ந்துவந்தனர். இந்த நகரின் நெடுநிலை மாடம்
ஒன்றில், இன்பம் துய்க்கும் இடங்கள் ஆறனுள் ஒன்றாகிய பள்ளி மெத்தையில், தேவ-கலைஞன்
மயன் செய்தது போன்ற மெத்தையில் கோவலனும் கண்ணகியும் இருந்தனர்.
பாடல்
உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:
குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment