Pages

Tuesday, 29 November 2016

நற்றிணை Natrinai 246

அவர் வருவேன் என்று சொன்ன கார்ப் பருவம் வந்துவிட்டது; 
வந்துவிடுவார்; 
கவலைப்படாதே, 
தோழி, 
என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

சுவர்ப் பல்லியும் இடுக்கான இடத்தில் இருந்துகொண்டு 
இனிய குறியொலி எழுப்பிவிட்டுப் 
பாங்காகத் தோன்றுகிறது. 

வீட்டு வேலி நொச்சியில் இருந்துகொண்டு 
செயல் நலம் மிக்க கருங்குயில் கூவுகிறது. 

உறுதி மிக்க உள்ளத்தோடு 
கோடையில் வறண்ட நிலங்கள் பலவற்றைக் கடந்து 
பொருள் செய்து வர அவர் சென்றுள்ளார். 

என்றாலும் சொன்ன சொல் பொய்க்காமல் வந்துவிடுவார். 

தோழி! 

முல்லை நிலத்தில் 
பொன்னிறக் கொன்றைப் பூவோடு சேர்ந்து 
பிடவம் பூவும் பூக்கும்படிச் செய்ய 
வானம் இடி முழங்குகிறது பார். 

‘வந்துவிடுவேன்’ என்று அவர் சொன்ன பருவம் இது அல்லவா?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, 5
செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வருவர் வாழி தோழி! புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
''வருதும்'' என்ற பருவமோ இதுவே?   10

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
காப்பியஞ் சேந்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


No comments:

Post a Comment