Pages

Sunday, 27 November 2016

நற்றிணை Natrinai 243

தேன் மிக்க மலைச்சோலை. 

அங்கே தெளிவாக அறல் மணல் படிந்த நீரோடை. 

அருகில் பெரிய பாறாங்கல். 

அடுத்திருக்கும் தூய மணல் மேட்டுக் கரையில் சலசலக்கும் கிளைகளுடன் தழைத்திருக்கும் நல்ல சுவை உள்ள மாமரம் இருக்கும் சோலை. 

அந்தச் சோலையில் தங்கி வாழும் பூப்போன்ற கண்களை உடைய நீலநிறக் குயில். 
அது கூவுகிறது. 

“சூதாட்டம் செல்வத்தைப் பெயர்த்து எறிவது போல வாழ்க்கை நிலையில்லாதது. 
அறிவுடையவர்களே! 
அதனைத் துய்க்காமல் நீங்கிவிடாதீர்கள்” 
என்று வாழ்க்கையைத் துய்க்கமுடியாத நிலையில் 
துறவு பூண்பவர் சொல்வது போலக் கூவுகிறது. 

என் உடலைத் தழுவியவண்ணம் இருக்கும்போது 
இவ்வாறு காதலி விரும்புமாறு காதலன் கூறுவான். 

பின் பொல்லாத காலம் வரின் 
பொருள் தேடப் பிரிதல் 
ஆண்களுக்கு இயல்புதான் என்றால், 
அதுதான் அறத்தைக் காட்டிலும் பொருள் மேலானது எனல்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
''கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு   5
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!'' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,     10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.
காமக்கணிப் பசலையார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


அவனுக்கு?
அவளுக்கு?

No comments:

Post a Comment