Pages

Sunday, 27 November 2016

நற்றிணை Natrinai 242

ஈரம் மிக்க பிடவ மலர் 
இலை இல்லாத புதர்ச்செடியில் அரும்பு விட்டிருக்கிறது. 

புதரில் படர்ந்திருக்கும் தளவம் பூக் கொடி மலர்ந்திருக்கிறது. 

கொன்றைப்பூ பொன் போல் மலர்ந்திருக்கிறது. 

மணி போன்ற நீல நிறத்தில் காயாம்பூக் கொத்து சிறிய கிளைகளில் மலர்ந்திருக்கிறது. 

இவை கார்காலம் தொடங்கிவிட்டதைக் காட்டுகின்றன. 

பாக! 

உன் தேரை மிகவும் விரைவாக ஓட்டிச்செல். 

அங்கே பார். 

பெரிதும் பெயர் பெற்ற களர் நிலத்தில் செல்லும் மான் கூட்டத்தில் பேதைப் பெண்மான் ஒன்று கண்ணை விழித்துப் பார்த்துக்கொண்டு இனத்தை விட்டு ஓட, 

அதனை இரலை ஆண்மான் காம உணர்வோடு தேடிக்கொண்டிருக்கிறது. 

போர்வினை முடிந்த பின்னர் இல்லம் மீளும் தலைவன் 
தன் தேர்ப் பாகனிடம் இவ்வாறு கூறுகிறான்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து      5
செல்க பாக! நின் தேரே: உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.         10

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.
விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கிளையில் மலர்ந்திருக்கும் காயா 

No comments:

Post a Comment