Pages

Saturday, 26 November 2016

நற்றிணை Natrinai 240

இந்த உலகைப் படைத்தவன் என்னைப் போலத் துன்புறக் கடவது.


காதலியைப் பெறுவதில் உள்ள துன்பத்தை உள்ளத்தில் கொண்டு 
காதலன் கடவுளை இவ்வாறு ஏசுகிறான்.

கூர்மையான அழகிய வெண்ணிறப் பற்கள். 
ஒளி வீசும் நெற்றி. 
இவற்றைக் கொண்டவள் இந்தச் சிறுபெண். 

இவள் கையும் என் கையும் என் உடம்பையும் இவள் உடம்பையும் பற்றி இறுக்கித் திருக வேண்டும். 

இதற்காகவே ஏங்கும் உயிர்ப்போடு வீங்கிக்கொண்டிருக்கும் முலை கொண்ட மார்பில் தூங்க வேண்டும். 

இப்படித் தூங்குதல் இடையீடு ஏற்படும் தன்மையது ஆயினும், 
இவளைப் பெறுவது இவ்வளவு கடுமையானதாக இருக்கிறதே! 

வெயில் காய்ச்சும் பரல் கற்களை உடைய பள்ளத்தின் 
ஒதுக்குப்புறத்தில் கணிச்சியால் குழியாக்கிய கூவல் பத்தலில் 
யானை இனம் ஒவ்வொன்றாகச் சென்று நீர் உண்ணும் 
காட்டு மலையில் நடப்பது போன்று 
இவளைப் பெறுவது கடினமாக இருக்கிறதே!

இந்த உலகைப் படைத்தவன் என்னைப் போலத் துன்புறக் கடவது.
  • ஐ > ஐது = “ஐ வியப்பு ஆகும்” தொல்காப்பியம்
  • அவல் = பள்ள நிலம்
  • கணிச்சி = குந்தாலி, குந்தாலம்
  • பத்தல் = நீர்க் குழி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்,         5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.         10

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது;
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.
நப்பாலத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

பத்தல் 

யானை ஆற்றில் நீர் பருகல்
பாடல் \ தோண்டிய பத்தல் சிறு குழியில் நீர் பருகல்

No comments:

Post a Comment