Pages

Saturday, 26 November 2016

நற்றிணை Natrinai 239

தொங்கும் ஞாயிறு மறைந்து ஒளி மயங்கும் மாலைப் பொழுதில் 
மகிழ்ச்சி கொண்ட பரதவர் 
இனிமையாகக் கடலில் பெற்ற பெரிய மீன்களை விற்பர். 

அவர்களது ஊர், நண்டு விளையாடிப் புலால் நாற்றம் அடிக்கும் மணல் முற்றங்களைக் கொண்டது. 

அந்த ஊருக்குச் செல்லும் வழியில் மணிகளைக் கட்டிச் சென்ற பொதி அவிழ்ந்து கொட்டிக் கிடப்பது போல நெய்தல் பூக்கள் பூத்துக் கிடக்கும். 

வழியில் செல்வோர் அதனை மதியாது சாகும்படி மிதித்துக்கொண்டு செல்வர். 

இப்படிப்பட்ட சேர்ப்பு நிலத்தை உடையவன் தலைவன். 

தலைவன் விரும்பிய வண்ணம் நான் அவனோடு கூடி இருக்கவில்லை. 

ஊரோ உன் முன்னங் கையிலுள்ள வளையல் உடையும் அளவுக்கு இறுக்கமாக அவனைத் தழுவு என்கிறது. 

எனக்காக இப்படிச் சொல்லி அழும் இந்த ஊர் திருமணத்துக்கு முன்பே அப்படி நான் செய்தால் என்ன ஆகும்? 

தலைவி தோழியைக் கேட்கிறாள். 

தொலைவில் காத்திருக்கும் தலைவன் கேட்டு 
மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.
  • ஞால் – ஞான்ற = தொங்கிய
  • மான்ற = கூடி மயங்கும்
  • பொதி = துணியில் கட்டிய மூட்டை
  • தப = சாகும்படி
  • வார் = நீட்சி
  • எல் = ஒளி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,  5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; ''முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,           10
முயங்கு'' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.
குன்றியனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


அந்த ஊரில் நண்டு விளையாடும் மணல் முற்றம் 

No comments:

Post a Comment