Pages

Friday, 25 November 2016

நற்றிணை Natrinai 236

தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

காமநோய் கட்டுக்கடங்காமல் பெரிதாகிவிட்டதாம். 
உடம்பு தீயில் எரிவது போல இருக்கிறதாம். 
வெளியில் சென்று ’ஒய்’ என்று சிறிது மூச்சு விடவேண்டும் போல் தோன்றுகிறதாம். 

முற்றத்துக்குச் சென்றால் இவள் நலம் பெறுவாள் போலத் தோன்றுகிறது 

என்று, 
நரகம் போன்ற நெஞ்சத்துடன் என்னை வாட்டும் 
அன்னையிடம் இனிச் சொல்லிவிடு, 

தோழி 

அவன் உயர்ந்த எண்ணம் இல்லாமல் என்னை வாட்டுகிறான். 

அவன் குன்றத்திலிருந்து வெளிப்படு, 
அவனது மலையெல்லாம் விளையாடி, 
அங்குள்ள பாறைகளில் மோதித் திரும்பும் காற்றானது 
பசலைநோய் படர்ந்திருக்கும் என் மேனியில் படும்படியாக 
முற்றத்துக்கு என்னைச் செல்லவிடு.

இப்படிச் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் தன்னை மணந்து எய்துவான் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு 
  • நந்துதல் = பெருகுதல்
  • நிரையம் = நரகம்
  • நுண்நேர் எல்வளை = நுட்பத்துடன் நேராக வளைந்திர்ருக்கும் ஒளி மிக்க  வளையல்
  • அண்ணல் = பெருமை மிக்க
  • வளி = காற்று
  • வியல் = அகன்ற

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ''பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது'' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு  5
உரை, இனி வாழி, தோழி! புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.              10

தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
நம்பி குட்டுவன் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

காதல் பிதற்றல்

No comments:

Post a Comment