Pages

Monday, 21 November 2016

நற்றிணை Natrinai 221

போர் வினை முடிந்து மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்கிறான்.


மணி (நீல) நிறத்தில் குவளைப் பூக்கள் நீர்நிலைகளில் பூத்துக்கிடக்கின்றன. 

தோன்றிப் பூக்கள் ஈரநிலப் புதர்களில் பூத்து ஒளிர்கின்றன. 

பொன் சங்கிலி போல் கொன்றை மலர்கள் கிளைகளில் தொங்குகின்றன. 

பாக! 

மகளிரின் மார்புக் கச்சமாகிய வம்பு ஆடையை விரித்து வைத்தது போலத் தோன்றும் முல்லைநிலப் பெருவழியில் நீரோட்டங்களைப் பிளந்துகொண்டு நம் வேலைப்பாடு அமைந்த தேர் செல்லட்டும். 

எனக்கு விருந்தளிக்கும் விருப்பத்தோடு என் மனைவி காத்திருப்பாள். 

அவளது அணிகலன் வீடெல்லாம் ஒளி வீசும். 

அன்றுதான் நடக்கத் தொடங்கி, நடக்கத் தெரியாத தன் மகனின் பூப்போன்ற கண்கள் உறங்கும்போதே என் தலைவர் வரவேண்டும் என்று அவனிடம் பேசிக்கொண்டிருப்பாள். 

அவள் பேசுவதை நான் கேட்க வேண்டும். விரைந்து தேரை ஓட்டுக.
  • வந்தீக = வருவாராக
  • எந்தை = எம் தந்தை \ கணவனை இவ்வாறு குறிப்பிடுவது வழக்கம் \ எந்தாய் என்பது இதன் விளி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,              5
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க பாக! நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்         10
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
''வந்தீக, எந்தை!'' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

"நீ உறங்கு. அவர் வருகிறார். அவருக்கு விருந்தளிக்க வேண்டும்"

No comments:

Post a Comment