Pages

Sunday, 20 November 2016

நற்றிணை Natrinai 217

அவன் இனியவன்தான்; 
என்றாலும் ஊடுவேன்; 
காரணம் அவன் அன்பு மிகுதல் வேண்டும் என்பதற்காக, 
என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.


புகழுடன் வாழ்பவரின் செல்வம் போலப் பெருமிதத்துடன் தோன்றும் யானை வலிமை மிக்க புலியை மருண்டு ஓடும்படிச் செய்துவிட்டு வருகையில் அருகில் நிற்கும் வேங்கைமரத்தைப் புலி என்று எண்ணி நடுங்கி, பின்னர் மரம் என்று தெளிந்து தன் சினத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றத்தவன் என் தலைவன். 

அவன் மிகவும் இனியவன். 
என்றாலும் அவன்மீது பிணக்குப் போட்டுக்கொண்டு ஊடுவேன். 

தோழி! 

அவன் என்னைப் பிரிந்து தொலைவிடம் செல்வதைத் தடுத்து நிறுத்தி என் சினத்தை அவன் தணிக்கவேண்டும் என்பதற்காக. – இவ்வாறு தலைவி தன் தோயியிடம் கூறுகிறாள்.
  • வேங்கை = வேங்கைப் புலியையும், வேங்கை மரத்தையும் குறிக்கும் பொதுச்சொல்
  • கதழ் வாய் = அதவும் பல்லில்லா வாய்
  • இருங்கேழ் வயப்புலி = இருண்ட நிறமும் வலிமையும் கொண்ட புலி
  • கருங்கால் வேங்கை = வலிமையான அடிமரம் கொண்ட வேங்கை
  • புலம்பு = தனிமை


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் 5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி! நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.

தலைமகள் வாயில் மறுத்தது
கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment