Pages

Saturday, 29 October 2016

அகநானூறு Agananuru 370

தலையில் பூச் சூடிய மகளிர் வளைந்த வட்டத்துக்குள் தொட்டு வண்டல் விளையாடுவர். 

இளைய ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவர். 

அவர்கள் இல்லம் திரும்பும் பகல் இருட்டும் காலம் இது.

தோழி (தலைவியைத் தோழி விளிக்கிறாள்)

அகன்ற இலைகளைக் கொண்ட புன்னைமர நிழலில் பகலெல்லாம் நீ எங்களோடு விளையாடினாய். (தலைவனுந்தான்) 

இரவு வந்ததும் காயல் புல்லால் வேயப்பட்ட உன் இல்லம் சென்று காதல் துன்பத்தோடு வருந்துவாய் ஆயின், உன் தந்தை உன்னைக் கட்டுக்காவலுக்குள் வைப்பான், வெளியில் செல்லாதே என்பான்.

செல்லாவிட்டால் நான் உயிர் வாழமாட்டேன் என்று நீ சொல்கிறாய். 

அப்படியானால் நீ மட்டும் கடற்கரைக் கானலிலேயே நில். 
கடல்-தெய்வம் நிற்பது போல் நில். 
நான் வெறி பிடித்தவள் போல என் அணிகலன்களை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ஆட்டக்காரி போல் இல்லம் திரும்புகிறேன். 

அப்படிச் செல்லவும் எனக்கு மனம் வரவில்லை. 
ஊரே பழி தூற்றட்டும். 
இங்கேயே கிடப்போம். 

தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவனுக்குச் சொல்கிறாள்.

(இப்பபடிப்பட்ட சொற்களைக் கேட்டுத் தலைவன் தலைவியை மணந்துகொள்வான் என்று தோழி நினைக்கிறாள்)

வண்டல் மண்ணில் பெண்பொம்மை செய்து விளையாடுதலையும் வண்டல் என்பர். 

சொல் பிரிப்புப் பதிவு
திணை  நெய்தல்

''வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே,
காயல் வேய்ந்த தேயா நல் இல்     5
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
அருங் கடிப் படுவலும்'' என்றி; மற்று, ''நீ
செல்லல்'' என்றலும் ஆற்றாய்; ''செலினே,
வாழலென்'' என்றி, ஆயின்; ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்   10
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
ஆடு மகள் போலப் பெயர்தல்  15
ஆற்றேன் தெய்ய; அலர்க, இவ் ஊரே!

பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.
அம்மூவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment