Pages

Friday, 28 October 2016

அகநானூறு Agananuru 369

செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். 

1
மகளே! 
என் நிலைமையை எண்ணிப் பார். 
வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். 
அவர்கள் இப்போது தவிக்கின்றனர். 

நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. 
மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. 
நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. 

அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. 

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். 

அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை.

ஊழ் = முறைமை
பலி = படையல் உணவு
2
கொடியவள் ஆகிவிட்ட நீ நினைத்திருப்பதை அப்போது உணராமல் போய்விட்டேன். 
வளையல் அணிந்தவளே! 
“இன்று நீ தலை முழுகும் நாள்” என்றேன். 
(வீட்டு விலக்காகியபின்னர் நீராடவேண்டிய நாள் – என்றேன். அவள் தன்னைத் தாய் தலைமுழுகப் போகும் நாள் என்று தாய் குறிப்பிடுவதாக நினைத்துக்கொண்டு) 
சினந்து வருந்தினாய்.
3
கடல் போல் பெரும்படையும், கைவளக் கொடையும் கொண்ட சோழர் போல் உன் பெற்றோர் நிதியம் படைத்தவர். அவர்கள் தம் இல்லத்தைப் புதுமையாக்கி உறவினர் சூழத் தம் பெருமைக்குத் தக்கவாறு திருமணம் செய்துவைக்க நீ விட்டுத் தரவில்லை.
4
கிளைகளுடன் ஓமை மரம் காய்ந்து கிடக்கும் நீண்ட வழியில் மணி கட்டிய பலகையுடன் வேல் நடப்பட்டிருக்கும் வழியில், துணிவோடு கல் நெஞ்சத்துடன் நீ அறியாத நாட்டுக்கு, வலிமை மிக்க உன் காதலனுக்கு ஒத்தவளாக, தகைமை இன்றி உன்னை அழைத்துச் செல்லும் சிறுமைக் குணம் படைத்தவனுக்கு ஒத்தவளாகச் சென்றுவிட்டாய். இதுதான் உன் மடமைத் தகுதி.
5
சீரும் சிறப்பும் இல்லாத அவன் மனை. ஏழைப் பெண்கள் வாழும் புல் வேய்ந்த குடிசை. அதன் முற்றத்துத் தூணில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டியிருக்கும். ஏதுமில்லாது வறுமையில் வாடும் அந்த மனையில் சிலம்பைக் கழற்றி வைக்கும் திருமணம் நடப்பதை என் மகள் விரும்பினாள் போலும். இதனை எண்ணி நான் வருந்துகிறேன். செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;                        5
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,
2
கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்!     10
இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனள் ஆகி, தற் தகக்
3
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,            15
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
4
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த     20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
5
''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,         25
மேயினள்கொல்?'' என நோவல் யானே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது.
நக்கீரர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment