Pages

Friday, 28 October 2016

அகநானூறு Agananuru 368

கொங்கு நாட்டில் நடக்கும் உள்ளித் திருவிழாவில் மக்கள் இடுப்பில், சலங்கை போல் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுவர்.

1
கானவன் காலில் தோல் செருப்பு அணிந்திருப்பான். சுட்ட வயலில் கரியைக் கழுவிய மழை ஈரத்தில் மடல் விட்டு நீண்ட கதிர்களுடன் விளைந்திருக்கும் தினையைக் காக்கும் மகளிர் ஊஞ்சலாடும் வகையில் பாறை அருகில் தழைத்த கிளைகளுடன் தோன்றும் வேங்கை மரமானது, பெண்மயிலின் குடுமி போல் தோன்றும். இப்படித் தோன்றும் நாட்டை உடையவன் என் காதலனாகிய நாடன்.
 
சூடுறு வியன்புலம் = மரத்தை வெட்டிச் சாய்த்துச் சுட்ட வயல்
தோடு = மடல்
கஞலிய = தழைத்த
2
அவன் என்னோடு சுனையில் நீராடினான். 

உயர்ந்த மலையில், காந்தள் மலர்ந்த சோலையில், குரங்குகளும் செல்லாத மரங்கள் மண்டிக்கிடக்கும் மலைக்காட்டில் இருக்கும் சுனை அது. 

மணம் கமழும் தெளிந்த நீரினை உடைய சுனை அது. 

பெண்யானையும் ஆண்யானையும் சேர்ந்து நீராடுவது போல என்னுடன் நீராடினான். 

அப்படி அவன் என்னுடன் நீராடிப் பல நாள் ஆயிற்று. 
ஆனால் சில நாள் ஆவதற்குள்ளாகவே என்னையும் அவனையும் சேர்த்து ஊரார் அலர் தூற்றத் தொடங்கிவிட்டனர். 

மாலையும் கழுத்துமாகச் சிற்றூரில் திரியும் மகளிர் மூங்கில் குழாயில் வைத்து விளையவைத்த தேன் போன்ற தேறல் கள்ளைப் பருகிவிட்டு அலர் தூற்றுகின்றனர். 

கொங்கு நாட்டு மக்கள் இடுப்பில் மணியைக் கட்டிக்கொண்டு உள்ளி விழாவின்போது தெருவில் ஆடுவர். அப்போது அவர்களின் மணி ஒலிப்பது போல பலரது வாய்கள் அலர் தூற்றுகின்றன. தோழி! அது ஏன்? தலைவி தோழியை வினவுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

1
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய 5
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
2
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்   10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி,
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,               15
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?

பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment