Pages

Sunday, 23 October 2016

அகநானூறு Agananuru 353

மீண்டும் பொருளீட்டச் செல்ல நினைக்கிறாயே, விருந்தோம்பும் இவளைப் பற்றி எண்ணிப் பார்த்தாயா, என்று தலைவன் தன் நெஞ்சை வினவுகிறான்.

1
நெஞ்சே! பொருளீட்டும் பொருட்டு மீண்டும் இவளைப் பிரிய வேண்டுமா? அப்படிப் பிரிய நினைத்தால் சற்றே எண்ணிப்பார். தூங்கி எழுந்ததும் கனவு காணாமல் போய்விடுகிறது. பகலும் சென்று மறுநாள் வந்துவிடுகிறது. இப்படி வந்த நாளும் கழிந்து மூப்பு வந்துவிடுகிறது. காம இன்பம் சிறப்பு மிக்கது. அது பெறுவதற்கு அரிய பேறு. இது உனக்குத் தெரியவில்லையே.
2
காற்றில் அசையும் உயர்ந்தோங்கிய மூங்கில் மோதி ஞெமை இலைகள் உதிர்கின்றன. இது சுட்டெரிக்கும் கோடைக் காலம். காற்று களர் மண்ணை அள்ளிச் சுழற்றுகின்றது. கடு வெயிலில் காடு வெம்பிக் கிடக்கிறது. பெண்மானைத் தழுவிக்கொண்டு கிளைக் கொம்புகளை உடைய ஆண்மான் தண்ணீரைத் தேடி வருந்துகிறது. உண்ண நீர் இல்லாமையால் அவை தழைகளைக் கூட உண்ண விரும்பவில்லை. தளர்ந்த நிலையில் தங்க நிழலும் இல்லாமல் அவை வருந்துகின்றன. இந்தக் காட்டில் நீ மீண்டும் செல்ல விரும்புகிறாயோ என்னவோ?
3
எண்ணிய விருந்தினர் வீட்டுப் பந்தலில் எப்போதும் சூழ்ந்திருக்கின்றனர். என் மனைவி அவர்களைப் பேணிக்கொண்டே இருக்கிறாள். கூந்தலில் தாழம்பூ முடித்திருக்கிறாள். மார்பில் மாலை அணிந்திருக்கிறாள். படுக்கையில் அமர்ந்துகொண்டு சிரிக்கும் வாயில் சில சொற்களைப் பேசுகிறாள். தழைத்துப் பொம்மிக் கிடக்கும் கூந்தலை உடைய இவளது குணத்தை எண்ணிப் பார்த்தாயா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்து அனைய ஆகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,             5
இந் நிலை அறியாய் ஆயினும், செந் நிலை
2
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,               10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,       15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
3
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,                20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment