Pages

Sunday, 23 October 2016

அகநானூறு Agananuru 352

தலைவி தலைவனையும் தோழியையும் பாராட்டுகிறாள். 

1
முடம் பட்டு முதிர்ந்திருக்கும் பலா மரத்தில் குடம் போல் பருத்துப் பழுத்திருருக்கும் பலாப்பழத்தை குரங்குக் கூட்டத்தின் தலைவன் கடுவன் (ஆண்குரங்கு) அருவி ஒலி கேட்டவண்ணம் மயிலாடும் பாறைமீது வைத்துக்கொண்டு தன் துணைக் குரங்குகளை அழைக்கும் குன்ற நாடன் அவன். திருவிழாவில் யாழிசைப் பாணரின் இசையுடன் விறலி ஆடும்போது முழவு முழக்குபவன் போலக் கடுவன்-குரங்கு பலாப்பழத்தை வைத்திருக்கும் நாடன் அவன்.
2
அவன் நல்ல குடியில் பிறந்தவன். கூடியவர்களை விட்டு விலகமாட்டான். கெடுதி விளையும்படி பேசமாட்டான். அன்பே உருவானவன் என்றல்லாம், தோழி, நீ நடக்கப்போவதை நன்கு அறிந்து கூறினாய். என் காதல் தோழியே அது உண்மையாவதைப் பார். – தலைவி சொல்கிறாள்.
3
குதிரை பூட்டிய தேரில் உலா வருபவன் அஞ்சி அரசன் (அதியமான் நெடுமான் அஞ்சி) அவனது தொன்றுதொட்ட புகழைக் பாடும் நூல் ஒன்று அக்காலத்தில் இருந்தது. அதனைப் பாண்மகன் ஒருவன் இசையமைத்துப் பாடினான். அதில் புதுப் பண்ணிசைச் திறம் (திறம் – பண்ணின் கூறு) புகுத்தப்பட்டிருந்தது. அந்த இசையைக் காட்டிலும், முதலிரவு இன்பத்தைக் காட்டிலும், அவன் எக்காலத்திலும் இனியவனாக எனக்கு விளங்குகிறான்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

1
''முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
2
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்'' என, நீ
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;           10
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
3
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,    15
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.

வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
அஞ்சியத்தை மகள் நாகையார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment