Pages

Wednesday, 19 October 2016

அகநானூறு Agananuru 344

தேரை விரைந்து ஓட்டும்படித் தலைவன் தேர்ப்பாகனை வேண்டுகிறான்.  

1
வளமான மழை பொழிந்து நீர் தேங்கி வெள்ளை நிலத்தில் காணப்படும் களர் நிலத்தில் காற்று குளிர்ந்து வீசும்போது வளைந்த கிளைகளுடன் முடம் பட்டுள்ள பிடா மரம் நிலாப் போன்ற மொட்டுகளை விரித்திருப்பது போன்று சிரிக்கும் பல்லைக் காட்டிக்கொண்டு கக்கத்துக் கையிலுள்ள குடத்தில் (தோணி, தோண்டி) நீர் கொண்டு செல்லும் மகளிர் போல மயில்கள் நடமாடும் காட்டில், இரவு வருவதற்குள்,
2
விரைந்து தேரை ஓட்டிச்செல். தேரில் மணி ஒலிக்கட்டும். நிழலில் ஒளி வீசுவது போன்ற நிறம் கொண்ட குதிரைகளைப் பூட்டு. தேரில் நான் அமரும் கொடிஞ்சி இருக்கை விளங்குமாறு அமையட்டும். குதிரை ஓட்டும் தோல்-சாட்டையை ஆராய்ந்து பார்த்துப் பயன்படுத்து. கைத்திறம் கொண்ட பாகனே, பக்குவமாக ஓட்டு.
3
நினைவுத் துன்பம் வருத்த பசலை படர்ந்த மேனியுடன் என்னை நயந்திருக்கும் என் காதலியின் முகத்தில் சிரிப்பைக் காணவேண்டும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  முல்லை

1
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
கை மாண் தோணி கடுப்ப, பையென,  5
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
2
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,     10
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
3
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்






No comments:

Post a Comment