Pages

Wednesday, 19 October 2016

அகநானூறு Agananuru 342

காதலியைப் பெற முயன்ற தலைவன் பெறமுடியாமல் ஏமாந்து தன் நெஞ்சோடு பேசுகிறான்.

1
என் நெஞ்சே! உனக்கு நான் உறவுக்காரன் அல்லவா? உன் உறவுக்காரனாக இருந்தும் என் காதலி உன்னைத் தண்டித்தும் அவளை நினைப்பதை நீ விடவே இல்லை. அவளை நினைக்காமல் என் கட்டுக்குள் இரு என்று நான் சொன்னால் என் கட்டுக்குள் நீ நிற்பதில்லை. அவளைப் புணராமலேயே புணர்ச்சியைப் பெற்றவர் போல அவளைப் போற்றுகின்றாய்.
2
தென் திசையில் வெல்லும் போர்த்திறம் கொண்ட கவுரியர் நாடு உள்ளது. அதில் மண் புற்று கொண்ட கோட்டை உள்ளது. அதில் இருந்துகொண்டு அரசன் தென்னன் ஆட்சி புரிகிறான். இந்தத் தென்னன் ஆனிரைகளைக் கவர்ந்துவரும் கள்வர்களின் பெருமகன். அவன் ஏவலைச் செயலாக்கும் போர்மறவர்களின் தலைவன் அவன். தன் விருப்பப்படி நடந்துகொள்ளாதவர்கள்ளின் ஊர்களைப் பாழாக்கியவன் அவன். இறந்த உடல்களைத் தின்னப் பருந்து பறந்துவரப் பல போர்களில் வெற்றி கண்டவன். மேலும் மழைமேகம் போலக் கொடை வழங்கும் வள்ளல் அவன். அழியாப் புகழ் பெற்றவன். அவன் மலையில் யாருமே தொட்டுப் பார்க்காத இடத்தில் தண்ணீர் கொட்டும் பாறையும், குகையும் உள்ளன. அந்தக் குகையில் வாழும் ‘வரையர மகளிர்’ போல என் காதலி யாருக்கும் கிடைத்தற்கு அரியவள். அழகு கட்டுப்பட்டிருக்கும் அல்குலை உடையவள் அவள். (அவ்வரி அல்குல்) அந்த அல்குலை உன்னால் அணைத்துக்கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும், நெஞ்சே, நீ என் கட்டுக்குள் நிற்க மறுத்து அவளிடமே செல்கிறாய். இது சரியில்லை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

1
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
2
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்    5
கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ 10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரைக் கணக்காயனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment