Pages

Tuesday, 18 October 2016

அகநானூறு Agananuru 341

இன்ப வேனில்


தன் உடல் நலத்தை நுகரும் துணை உள்ளவர்களுக்கு இது புதுப் புது இன்பம் தரும் வேனில் காலம் ஆகும். 

எனக்கு இந்த வேனில் காலம் அப்படிப்பட்டது அன்று. 

எனக்கு உயிரோடு வாழும் வலிமை இல்லை. 

காரணம் அவர் என்னுடன் இல்லை.

அணிந்துகொள்வதற்காகக் கோங்கம் பூ பறிக்கும் நிலையில் உள்ளது.

குயில் இனிமை தவழும் மாமரத்துக் கிளையில் இருந்துகொண்டு தன் துணையை அழைக்கிறது.

நாடெல்லாம் பரந்தோடும் காவிரியில் பரிசிலில் செல்வோர் உந்தப் பயன்படுத்தும் மூங்கில் கோலுக்கு அடங்ககாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய மறுநாள் ஆற்றில் அறுபட்டுக் கிடக்கும் மணலில் இருக்கும் அறுகம் புல்லை மேய்ந்த நாக்கோடு, கொட்டேறி கொண்ட காளைமாடு, காவிரி நீரை அசதி தீரப் பருகிவிட்டு, காஞ்சி மரத்தடியில் படுத்திருக்க, அதன்மீது காஞ்சி மலரின் பொன்னிறத் தாதுகள் அதன்மீது உதிர, பொன்னிற மேனியுடன் அந்தக் காளைமாடு மணல் குவியலுக்குச் சென்று படுத்து உறங்குகிறது.
இப்படிப்பட்ட இந்த இன்ப வேனில் தன் உடலின்பத்தைத் துய்க்கும் காதல்-துணைவர் உள்ளவருக்குத்தான். அவர் அருகில் இல்லாத எனக்கு இல்லை – என்கிறாள் தலைவி, தோழியிடம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை 341. பாலை

உய் தகை இன்றால் தோழி! பைபய,
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,      5
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,   10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில்மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?

பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
ஆவூர் மூலங்கிழார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment