Pages

Tuesday, 18 October 2016

அகநானூறு Agananuru 340

தோழி தலைமகனுக்குச் சொல்கிறாள்.

1
பல நாள், பகலில் வந்து, வந்த வருத்தம் நீர்வதற்காக, புன்னை மரப் பூங்கா நிழலில் காலத்தைப் போக்கிவிட்டு, மாலை வந்ததும் இவளை (என் தலைவியை) ஆசையோடு பார்த்துவிட்டு, உன் தேரோட்டி பண்ணிசையுடன் தேரை இயக்க, நீ செல்கிறாய். இன்று நீ அவ்வாறு செல்வதைக் கைவிடுக.
2
அழியாத புகழ் பெற்றவன் பொன்னணி பூண்டு திகழும் திரையன். கடலோரக் கானல் நிலத்தில் இருக்கும் அவன் ஊரான பவத்திரி போல் நல்லழகும் இளமையும் கொண்டவள் இவள். நீ சென்றதும், கழியில் மோதும் அலை இவளது அழகைக் கொண்டுபோய்-விடுகிறது.
  • திரையன் - தொண்டைமான் இளந்திரையனின் அண்ணன்

3
அந்த நீரலையில் வளைந்த பல்லை உடைய பாம்புகளும், பெரிய பெரிய சுறா மீன்களும் திரிகின்றன. “அவர் சென்றுவிட்டாரே” என்று இவள் ஏங்குகிறாள். இப்போது பொழுது போய் இருள் வந்துவிட்டது. பூப் போன்ற புலம்பு நிலத் தலைவனே! இன்று இவ்வூரில் தங்கிச் சென்றால் என்ன?
4
எங்களிடம் மீனை விற்றுக் கொண்டுவந்த நெல் இருக்கிறது. தயிர் இருக்கிறது. தயிர்ச் சோறு உண்ணத் தருவோம். வடநாட்டு மக்கள் கொண்டுவந்து தந்த சந்தனக் கல்லில், குடநாட்டில் விளைந்த சந்தனக் கட்டையைத் தேய்த்துச் சந்தனம் பூசிவிடுவோம். எங்கள் பரதவர் இரவு வேளையில் மீன் பிடிக்கச் சென்றுவிடுவர். அதோ பார் முற்றத்தில் வலை தாழை மரத்தில் தொங்குகிறது. அது கிழிந்த வலை. வலையில் விழுந்த பெருமீனைப் பிடிக்கப் பரதவர் கூர்-உளியை வீசும்போது கிழிந்த வலை அது. கடல்-காற்று வீசும்போது அந்த வலை ஆடுவதைப் பார். அதுதான் நாங்கள் வாழும் ஊர். அங்குத் தங்கிச் செல்லலாமே.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் 340. நெய்தல் திணை

1
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம   5
2
''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
கழியே ஓதம் மல்கின்று; வழியே
3
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;               10
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது'' என,
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
4
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;       15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,      20
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?

பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.
நக்கீரர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment