Pages

Monday, 17 October 2016

அகநானூறு Agananuru 339

காமமா, பொருளா? தலைவன் கலங்குகிறான்.

1
விரைந்து செல்லும் குதிரை, ஓங்கி உயர்ந்த தேரின் விசைக்கயிற்றில் பூட்டப்பட்டு, ஒளி வீசும் தேர்ச் சக்கரம் நிலத்தைப் பள்ளமாக்கிக்கொண்டு செல்கிறது. அந்தப் பள்ளத்தில் நீர் பாம்பு போல் நெளிந்து ஓடுகிது. வயலில் பயிற்றங்காய்கள் விரிந்த கைவிரல்கள் போலக் காய்த்திருக்கின்றன. இப்படிப் பனிக்காலம் தலைகாட்டுகிறது.
2
பொருளீட்டும் முயற்சியில் ஈடுபட்டு, முன்பொரு காலத்தில் இந்தக் காட்டுவழியில் வந்த நெஞ்சம் ஆண்மை உணர்வோடு இங்குச் செயலாற்ற விரும்புகிறது. காமம் அதனைத் தடுக்கிறது. இப்படி என் நெஞ்சம் கவை பட்டுக் கிடக்கிறது. இரண்டு பக்கத்திலும் நெருப்புப் பற்றி எரியும்போது இடையில் திண்டாடுபவர் போல நான் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாதபடி நொந்துகொண்டிருக்கிறேன். என் காதலியோ இரங்கத்தக்கவள். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு போல என்னோடு நட்பு கொண்டிருப்பவள். காதல், உடலில் உயிர் வாழ்வது போன்றது. பொருளுக்காகப் பிரிதல் உடலிலிருந்து உயிர் பிரிவது போன்றது. நெஞ்சே! நான் என்ன செய்வேன்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் 339. பாலை

1
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட 5
2
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;         10
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே!

போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
நரை முடி நெட்டையார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்




No comments:

Post a Comment