இவள் பாண்டியனின் பொதிய மலையில் பூத்திருக்கும் காந்தள் மலர் போல் மணக்கும் நெற்றியை உடையவள். பொறையனின் கொல்லிமலை போல இவள் நட்பு விடுபடாமல் இருக்கவேண்டும். சோழனின் புகார் கடலலை போல நட்புறவு முழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். – விரும்பிச் சென்ற தலைவியைப் பார்க்க முடியாமல் மீளும் தலைவன் இவ்வாறு நினைக்கிறான்.
1
குன்றுகள் ஓங்கி நிற்கும் நிலப்பரப்பு கொண்ட நாடுகள் பல புகழ்ந்து பேசும் அரசர்கள் பலர். அவர்களுள் அறநெறியைக் கடைப்பிடிக்கும் செங்கோலுடன், அறமல்லாத மறநெறியை வீழ்த்தி வெற்றி கண்டு புகழ் பெற்ற தோளினை உடையவன் பசும்பூண் பாண்டியன். அவன் மலை பொதியம். அது அணங்குகள் வாழும் மலை. அதில் பூத்திருக்கும் காந்தள் பூவின் மணம் கமழும் நெற்றியைக் கொண்டவன் என் காதலி. அவள் நெருங்கிய ஈரமான கூந்தலை உடையவள். மாமை நிறம் கொண்டவள். அவள் தன் வளையலணிந்த கைகளால் என்னைச் சுற்றிக்கொள்வாள். நான் அவளைத் தழுவிக்கொள்வேன். அப்படிச் சுற்றிக்கொள்ளும் ஆசையோடு இங்கு வருந்திக்கொண்டிருக்கிறேன்.
- பசும்பூண் = பசும்பொன்னால் செய்த பூண் அணி கொண்டவன், பசும்பொன் = மாற்றுக்குறையாத தங்கம்
- வயவு = ஆசை
- உயவு = ஏக்கம்
- கவான் = மலைப்பிளவு
2
பகைவர் நாடு பாழாகும்படி அழிக்க வல்லமை மிக்கவன் வெற்றிவேல் ஏந்திய பொறையன். அவன் கொல்லிமலை அகன்ற மலைக்காடுகளைக் கொண்டது. அந்தக் கொல்லிமலை மக்கள் நட்பில் மேம்பட்டவர்கள். அவர்கள் போல எனக்கும் அன் காதலிக்கும் இடையேயுள்ள நட்புறவு மேம்படவேண்டும்.
- பொறையன் = பொறைநாட்டை ஆண்ட சேரன்
3
சோழன் தூதை விரும்பாதவன். வானத்தையும் கிழிக்கும் வாளைக் கொண்டவன். கன்று போட்ட பசுவினங்களைக் கவர்ந்து வரும் இளையர்களின் பெருமகன். தொகுதியாக ஒன்று சேர்ந்து நாட்டை ஆள்பவன். அவன் ஊர் பட்டினப்பாக்கம். அதன் கடல்துறையில் காவிரியாறும் கடலும் கலந்து முழங்கும் அலை போல அவளும் நானும் கலந்து வாழவேண்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
குன்று ஓங்கு வைப்பின்
நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை
அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன்,
அமர்
மறம் சாய்த்து எழுந்த
வலன் உயர் திணி தோள்,
பலர் புகழ் திருவின்,
பசும் பூட் பாண்டியன் 5
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின்
கவாஅன்,
சினை ஒள் காந்தள்
நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி
மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர்
தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும், என்றும், 10
வயவு உறு நெஞ்சத்து
உயவுத் துணையாக,
2
ஒன்னார் தேஎம் பாழ்
பட நூறும்
துன் அருந் துப்பின்
வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக்
கொல்லி போல,
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் 15
3
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த
திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர்
பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள்
மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந்
துறை 20
முழங்கு இரு முந்நீர்த்
திரையினும் பலவே!
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
மதுரைக் கணக்காயனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment