Pages

Monday, 10 October 2016

அகநானூறு Agananuru 330

அவன் நம்மோடு விளையாடினான். 
அவன் பின்னே என் நெஞ்சம் சென்றுவிட்டது.

1
அவன் புலம்பன். 
கழியில் நாம் பூ பறிக்கும்போது நம்முடன் சேர்ந்து பூ பறித்துத் தந்தான். 
கானலில் நாம் இளைப்பாறியபோது நம்முடன் அமர்ந்து இளைப்பாறினான். 
வரிமணலில் நாம் வண்டல்-பாவை செய்து விளையாடியபோது நம்முடன் சேர்ந்து விளையாடினான். 

நாம் இன்பம் அடையுமாறு நம்மோடு சேர்ந்திருந்தான். 
நாம் ஏளனம் செய்யும்படி நம்மைப் பணிந்தான். 
தன் துன்பம் வெளிப்படுமாறு என்னிடம் வெளிப்படுத்தினான். 
தவறியும் நம் துன்பத்தை அவன் உணர்ந்துகொள்ளவில்லை. 
ஏதோ ஏமாந்தவன் போலச் சென்றுவிட்டான்.
புலம்பு = கடல்சார் நிலம்
கானல் = கடல் சார் பூங்கா
2
அவனைப் பின் தொடர்ந்து என் நெஞ்சம் தன் நிறையுடைமையைக் காத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டது. 
இது தகைமை இல்லாத நெஞ்சம். 

சென்ற என் நெஞ்சம் அவனை அடைந்ததோ அடையவில்லையோ தெரியவில்லை. 

ஒருவேளை, அவனிடம் சென்றபின், தன் காம உணர்வை வெளிப்படுத்தாமல் நாணி நிற்கிறதோ என்னவோ.
3
அதோ பார். 
அவன் ஊர்ந்து வந்த தேர் செல்கிறது. 
குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் செல்கிறது. 
தாழை மடல் இருக்கும் எக்கரில் செல்கிறது. 
பசுமை நிற அடும்புக் கொடி வருந்தும்படி அதன்மீது ஏறி ஊர்ந்து செல்கிறது. 

சிறுகுடியில் வாழும் பரதவரின் திமில் பெருங்கடலில் செல்வது போலப் பெருமிதத் தோற்றத்துடன் செல்கிறது.
  • உதுவ = அருகிலுள்ள இந்த இடத்திலும் இல்லாமல், மனக்கண்ணால் பார்க்கும் அந்த இடத்திலும் இல்லாமல் தொலைவில் தோன்றும் இடம்.
  • எக்கர் = ஈரமணல்
  • குப்பை = பயனற்ற பொருள்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  நெய்தல்

1
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,
தன் துயர் வெளிப்படத் தவறி நம் துயர்
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு   5
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!
2
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று,
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்,
காமம் செப்ப, நாணின்று கொல்லோ?              10
3
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
குப்பை வெண் மணற் குவவு மிசையானும்,
எக்கர்த் தாழை மடல் வயினானும்,
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த    15
கடுஞ் செலல் கொடுந் திமில் போல,
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது.
உலோச்சனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மணலில் தேர் செல்கிறது - பாடல்

No comments:

Post a Comment